

கடலில் காணாமல் போன சென்னை மீனவர்கள் மியான்மரில் மீட்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 23-ம் தேதி 9 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கரை திரும்பாத காரணத்தால் இந்திய கடலோர காவல் படை, இந்திய கப்பல் படையின் படகுகள் மற்றும் விமானம் மூலம் தேடும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த சூழலில், காணாமல் போன மீனவர்கள் 55 நாட்களுக்கு பிறகு மியான்மரில் மீட்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: காணாமல் போன 9 மீனவர்களும் நேற்று அதிகாலை மியான்மர் கடல் பகுதியில் அந்நாட்டு கடற்படையினரால் மீட்கப்பட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் வழியாக தகவல் பெறப்பட்டுள்ளது. மேலும், மீட்கப்பட்ட மீனவர்களை விரைவில் தாயகம் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.