

மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.
அதிமுக ஜெ., பேரவை சார்பில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்ப்பதற்கும், தகுதித் தேர்வு மற்றும் போட்டித்தேர்வு வெற்றிகரமாக எதிர்கொள்ளவும் திறன் மேம்பாட்டுக்கான வழிகாட்டு பயிற்சி முகாம் காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்க சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் வினய், மாநகராட்சி ஆணையாளர் எஸ். விசாகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என். ஜெகதீசன் முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் புவனேஸ்வரன், அதிமுக செயற்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வருவாய்துறை அமைச்சரும், ஜெ.., பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார்.
நீட் தேர்வு பயத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது;
கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று கீதையில் கூறப்பட்டுள்ளது. கடமையைச் செய்ய வேண்டும் பலன் பெறும் அதிகாரம் நம்மிடம் இல்லை. அது இறைவனிடத்தில் இருக்கிறது. நீங்கள் கடமையே கண்ணாக செயல்படுத்திட வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தையுடன் மனம் விட்டுப் பேச வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் மனதில் உள்ள அழுத்தங்கள் குறையும். மாணவர்கள் எதை இழந்தாலும் தன்நம்பிக்கையை இழக்க கூடாது.
எம்ஜிஆர் சினிமாவில் நுழையும்போது புறக்கணிக்கப்பட்டார். ஆனால் அவரது மனம் தளரவில்லை. இன்று நாடு போற்றும் தலைவராக உள்ளார். இதற்கு காரணம் அவரின் தன்னம்பிக்கை.
மதுரையைச் சேர்ந்த அமுதா ஐஏஎஸ் இன்று பிரதமரிடம் இணைச் செயலராக பணியாற்றுகிறார். பார்வை சவால் கொண்ட மாணவி, ஐஏஎஸ் தேர்ச்சிப்பெற்றுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் ரஞ்சித் குமார் சர்வதேச அளவில் போட்டியிட்டு ஜனாதிபதி பாராட்டை பெற்றுள்ளார். இவர் உள்ளத்தில் ஊனம் இல்லை. அதனால் வெற்றி பெற்றுள்ளார். மாணவர்கள் உள்ளத்தில் ஊனம் இருக்கக் கூடாது.
ஆற்று நீர் எப்படி பள்ளம், மேடுகளில் வளைந்து நெளிந்து முன்னேறிச் செல்கிறது. ஒருபோதும் பின்நோக்கி செல்ல வில்லை/ அதுபோல் முன்னேறிச் செல்லவேண்டும் பின்னோக்கி செல்லக்கூடாது . மாணவர்களுக்கு நீட் மட்டும் வாழ்க்கை இல்லை. பல்வேறு துறைகள் காத்திருக்கின்றன. அதில் நீங்கள் வெற்றி பெற்று சாதனையாளராக மாறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.