Published : 14 Sep 2020 07:43 PM
Last Updated : 14 Sep 2020 07:43 PM

அண்ணா இல்லாதது இந்தி பேசாத மாநிலங்களுக்குப் பெருத்த நஷ்டம்!- திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் சு.துரைசாமி ஆதங்கம்

திருப்பூர்

மத்தியில் ஆளும் பாஜக அரசால், இந்தி மொழி திணிக்கப்படுவதாக, சர்ச்சைகள் சுழன்றடிக்கும் நேரத்தில், அண்ணாவின் 112-வது பிறந்த நாள் நாளை (செப். 15) கொண்டாடப்படுகிறது. அண்ணாவால் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், மதிமுகவின் மாநில அவைத் தலைவருமான திருப்பூர் சு.துரைசாமியைச் சந்தித்தோம்.

'இந்து தமிழ்' இணையதளத்திடம் அவர் கூறியதாவது:

''1965-ம் ஆண்டு வரை அகில இந்தியக் கட்சிகள் அனைத்தும், இந்திதான், ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தின. தமிழகத்தின் அண்ணாவைத் தவிர! 1965-ம் ஆண்டு அண்ணா தலைமை தாங்கி நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால்தான், இந்தி பேசாத மாநில மக்கள் மூன்றாம் தரக் குடிமக்கள் ஆக்கப்படாமல் தப்பித்தனர்.

இந்தி பேசக் கூடிய மாநிலங்களில் தென்னிந்திய மொழிகளில் ஒன்றைப் படிக்க வேண்டும் என, இந்திராகாந்தி 1968-ம் ஆண்டு சட்டம் கொண்டுவந்தார். இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை, ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் என அவரது தந்தை நேரு முன்னதாக வாக்குறுதி அளித்திருந்தார். உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிஹார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் யாரும் தென்னிந்திய மொழிகளைப் படிக்கவில்லை.

ஆங்கிலம் படித்ததால்தான், தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த அதிகம் பேர் உலக நாடுகளில் பல்வேறு பொறுப்புகளில் இருக்கின்றனர். ஆனால் பிஹார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எத்தனை பேர் வெளிநாடுகளில் பொறுப்புகளில் இருக்கிறார்கள்? தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து இன்னொரு மொழியை மோடி படிக்கச் சொல்கிறார். சூழ்ச்சியின் மூலம் பிரதமர் இந்தியைத் திணிக்கிறார்.

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டு புலம்பெயர்ந்து வாழ்பவர்கள்தான், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கிறார்கள். ஆங்கிலம் இன்றைக்கு உலக மொழியாக மாறிவிட்டது. 'இந்திய மாநிலங்களுக்கிடையே பொதுவான மொழியான ஆங்கிலம், தகவல் பரிமாற்றத்துக்கு எளிய மொழியாக உள்ளது' என அண்ணா அன்றைக்கே நாடாளுமன்றத்தில் பேசினார்.

பெரும் நஷ்டம்

'ஜன கண மன' என்ற தேசிய கீதமும், 'வந்தே மாதரம்' என்ற தேசத்தாய் வாழ்த்துப்பாடலும், வங்க மொழியில் இருந்து வந்தவை; இந்தியில் அல்ல. வேறு எந்த மாநிலத்தையும் விட, தமிழகம் மற்றும் கேரளாவில்தான் பட்டதாரிகள் அதிகம் பேர் இருக்கின்றனர். கல்விக் கொள்கை மாநில அரசின் பட்டியலில் இருக்க வேண்டும். மொழிக் கொள்கையில் மத்திய அரசு தலையிடத் தேவையில்லை.

இன்னும் 5 ஆண்டு காலம் அண்ணா உயிரோடு இருந்திருந்தால், இந்தி பேசாத மாநிலங்களோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, எல்லோருடைய மாநில மொழிகளும் மத்தியில் ஆட்சி மொழியாக்கப்பட்டிருக்கும். அண்ணா இல்லாதது இந்தி பேசாத அனைத்து மாநிலங்களுக்குமான பெரும் நஷ்டம். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிஹார், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் பேசும் மொழிதான், தேசிய மொழி என்பதை எப்படி ஏற்க முடியும்?

ஒரு மொழியை மட்டும் முன்னிறுத்துவதுதான், இன்றைய இந்தியாவின் சிக்கல். இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி பேசும் மக்களுக்குத் தாய்மொழியாகவும் இருக்கும், அரசு மொழியாகவும் இருக்கும். அதுவே பயிற்றுமொழியாகவும் இருக்கும். மத்திய அரசின் மொழியாகவும் இருக்கும். இந்தி பேசும் மக்களுக்குப் பல வித சலுகைகள், வாய்ப்புகள் மற்றும் உரிமைகள்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1938-ம் ஆண்டு இந்தியைக் கொண்டு வந்த மூதறிஞர் ராஜாஜி, அதன்பின்னர் இந்திக்கு எதிராக 1956-ம் ஆண்டு இந்தியை எதிர்த்து முதல் கையெழுத்துப் போட்டார். மத்திய அரசின் இந்தித் திணிப்பால் தமிழக மக்கள், இரண்டாம்தரக் குடிமக்கள் ஆக்கப்படுவார்கள் என்ற காரணத்தினால், ராஜாஜி, பெரியார், அண்ணா மற்றும் தமிழறிஞர்கள் கையெழுத்திட்டு அறிக்கை அளித்தனர்.

1993-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்குத் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி நாடாளுமன்றத்தில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, இன்று நடைமுறையில் இருக்கிறது. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தயவு மத்திய அரசுக்குத் தேவைப்பட்டபோது ஜெயலலிதா இதனை நிறைவேற்றிக் காட்டினார்.

மத்திய அரசு தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போதெல்லாம், தமிழைத் தேசிய மொழியாக்குகிற கோரிக்கையை முன் வைத்திருந்தால், அன்றைய அரசு நிச்சயம் நம்முடைய மொழிகளை ஆட்சிமொழியாக ஒப்புக் கொண்டிருக்கும். மத்திய அரசு பலவீனமாக இருந்த நேரத்தில், இந்த வாய்ப்பைத் தமிழக ஆட்சியாளர்கள் தவறவிட்டுவிட்டார்கள்.

அண்ணா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அடையாறு மருத்துவமனையில் இருந்து அவரது உடல் முதலில் கொண்டு வந்து வைக்கப்பட்ட இடம் நுங்கம்பாக்கம் இல்லம். அந்த இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். காந்தி, நேரு, அம்பேத்கர் போன்று பல தலைவர்களுக்கு நினைவு இல்லங்கள் இருக்கும்போது, அண்ணாவுக்குச் சென்னையில் அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்காமல் இருப்பது, எங்களைப் போன்ற திராவிட மூத்த தலைவர்களின் ஆதங்கமாக உள்ளது''.

இவ்வாறு சு.துரைசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x