

மதுரை அருகே திருநகரில் 300 தாவரங்களைக் கொண்டு ஒரு குருங்காட்டை உருவாக்கும் முயற்சியை அப்பகுதி இளைஞர்கள் மேற்கொண்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருநகர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் திருநகர் பக்கம் என்ற அமைப்பை உருவாக்கி, ஆதரவற்ற முதியவர்களை மீட்டு அரவணைப்பது, சாலைகள், தெருக்களில் அடிப்பட்டு கிடக்கும் விலங்குகளை மீட்டு சிகிச்சை அளித்து மீண்டும் காட்டிற்குள் கொண்டு போய்விடுதல், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுவது என பொதுமக்கள் பாராட்டை பெற்றனர்.
தற்போது அவர்கள் அடுத்தக்கட்ட முயற்சியாக, நகருக்குள் குருங்காடு உருவாகும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக திருநகர் அண்ணா பூங்கா மைதானம் பகுதியில் இந்த குருங்காட்டை உருவாக்குவதற்காக மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
மாங்கன்று, பலா, கொய்யா, மாதுளை, சிறு நெல்லி, நாவல், மலை வேம்பு, மந்தாரை, சீதா, மருதாணி, செம்பருத்தி, பவளமல்லி உள்ளிட்ட 25 வகையான 300 மரக்கன்றுகளை நட்டனர்.
இதுகுறித்து திருநகர் பக்கம் ஒருங்கிணைப்பாளர் விஸ்வா கூறுகையில், ‘‘இந்த குருங்காடு பல்லுயிர்க்குமானது. மனிதர்களை தவிர்த்து மற்ற எல்லா உயிர்களும் நேரடி பலன் பெறும் வகையில் இந்த காடு எதிர்காலத்தில் அமைகிறது.
மனிதர்கள் பூக்களையோ, கனிகளையோ, விறகுகளையோ எடுகு்க அனுமதி இல்லை. மனிதர்களின் நுகர்வுப் பசிக்கான காடு இது இல்லை. முறு்றிலும் மனிதர்கள் தலையீடு இல்லாத ஒரு காடாக வளர்க்கப்படும். இந்த முயற்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைந்து திருநகர் பக்கம் குழுவினர் மேற்கொண்டுள்ளோம்.
இந்த குருங்காட்டில் வளரும் மரங்களில் பறவைகள் வந்து வசிக்கும். சுற்றுச்சூழல் மேம்படும். பல்லுயிர்ப் பெருக்கம் ஏற்படும். மழை மேகங்களை ஈர்க்கக்கூடிய புங்கை, இலுப்பை, வாகை, வேம்பு போன்ற மரக்கன்றுகளையும் இந்த பூங்காவில் நட்டு வருகிறோம். அதனால், எதிர்காலத்தில் இப்பகுதியில் கூடுதல் மழை கிடைக்கும். குருங்காட்டிற்காக வரும் பறவைகள் உண்பதற்காக மா, பலா, கொய்யா, சீதா, மாதுளை, நாவல் போன்ற அவைகள் விரும்பி சாப்பிடும் பழ மரக்கன்றுகளையும் நடவு செய்துள்ளோம். பழங்களைத் தின்று எச்சமிடும் பறவைகளால் மரக்கன்றுகள் முளைக்கும். இதனால் உணவுச் சங்கிலியில் தடை ஏற்படாது, ’’ என்றார்.