

ராமநாதபுரத்தில் நடைபெற்ற ரூ.300 கோடி மோசடி வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரதீப் சக்கரவர்த்தி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரத்தில் புலியன் பைன்டெக் எல்எல்பி நிறுவனம் நடத்திய வந்த நீதிமணி, ஆனந்த் ஆகியோர் சுமாம் 750 பேரிடம் ரூ.300 கோடி அளவுக்கு பணம் வசூலித்து மோசடி செய்தனர். நானும் இந்த நிறுவனத்தில் ரூ.50 லட்சம் முதலீடு செய்தேன்.
இந்த மோசடி தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீஸார் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ஆகியோர் சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நீதிமணி, ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் ரிசர்வ் வங்கி அனுமதியில்லாமல் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றத் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். எனவே, ரூ.300 மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், பாஸ்கர் ஆகியோ் வாதிட்டனர். அரசு தரப்பில் மோசடி வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, இந்த மோசடியில் எத்தனை பேருக்கு தொடர்புள்ளது? எவ்வளவு பணம் மோசடி நடைபெற்றுள்ளது? எத்தனை பேர் புகார் அளித்துள்ளனர்? எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது? அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றார்.
இந்த மோசடி வழக்கின் விசாரணையில் ராமநாதபுரம் உதவி ஆட்சியர் சுக பத்ரா, ராமநாதபுரம் எஸ்பி வருண்குமார் (இப்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்), ராமநாதபுரம் டிஎஸ்பி வெள்ளைத்துரை ஆகியோர் தலையிட தடை விதிக்கக்கோரியும், மூவர் மீது ஒழுங்கு நடவடிக்க எடுக்கக்கோரியும் பிரதீப் சக்கரவர்த்தி தனி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பாக மூவரும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.