Published : 14 Sep 2020 02:33 PM
Last Updated : 14 Sep 2020 02:33 PM

டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்டக் கோரி மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டுவது குறித்து அரசுதான் முடிவெடுக்க முடியும் எனக் கூறி, அந்தக் கோரிக்கையுடன் தொடரப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கலைஞர் தமிழ்ப் பேரவை மாநிலச் செயலாளர் பி.ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''ஆலந்தூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ என்றும், சென்ட்ரல் மெட்ரோ ஸ்டேஷனுக்கு எம்.ஜி.ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் மெட்ரோ என்றும், சிஎம்பிடி மெட்ரோ ஸ்டேஷனுக்கு ஜெ.ஜெயலலிதா சிஎம்பிடி மெட்ரோ ஸ்டேஷன் என்றும் பெயர்களை முதல்வர் பழனிசாமி சூட்டியுள்ளார்.

ஆனால், சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கான திட்டத்தை முதன்முதலாக வடிவமைத்து மத்திய அரசிடம் அனுமதி பெற்றவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இதற்காக ஜப்பான் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ளது போன்ற மெட்ரோ திட்டத்தை சென்னையிலும் கட்டமைக்க திமுக ஆட்சிக் காலத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மெட்ரோ திட்டத்துக்கு முக்கியக் காரணமான கலைஞரின் முயற்சியைத் திட்டமிட்டு மறைக்கவும், அரசியல் காரணங்களுக்காகவும் மெட்ரோ ஸ்டேஷன்களுக்கு 3 முன்னாள் முதல்வர்களின் பெயர்களை தமிழக அரசு சூட்டியுள்ளது. அந்த வரிசையில் தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ஸ்டேஷனுக்கு ‘டாக்டர் கலைஞர் கருணாநிதி டிஎம்எஸ் மெட்ரோ ஸ்டேஷன்’ என பெயர் சூட்ட உத்தரவிட வேண்டும்'' எனக் கோரினார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெயரை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சூட்டுவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது எனவும், அரசுதான் முடிவெடுக்க வேண்டுமெனவும் கூறிய நீதிபதிகள் அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x