சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எங்களின் கோரிக்கை கவனிக்கப்படுமா?- எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அரசு மருத்துவர்கள்

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எங்களின் கோரிக்கை கவனிக்கப்படுமா?- எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அரசு மருத்துவர்கள்
Updated on
2 min read

கரோனா பரவல் தீவிரத்துக்கு மத்தியில் தொடங்கியுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலாவது தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட முதல்வர் உத்தரவிடவேண்டும் என அரசு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசிய அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் மாநில நிர்வாகி பெருமாள் பிள்ளை, ''அரசு மருத்துவர்கள் சுகாதாரத் துறையில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தி, தொடர்ந்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்து வருகிறோம். இருப்பினும் இங்கு அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே குறைவான ஊதியம் தரப்படுவது வேதனையளிக்கிறது.

அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை 6 வாரத்துக்குள் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் அதை நிறைவேற்றாததால் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தள்ளப்பட்டோம். அப்போது, போராட்டத்தை வாபஸ் பெற்றால், அரசு தாயுள்ளத்தோடு கோரிக்கையை நிறைவேற்றும் என்ற முதல்வரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றோம். இருப்பினும் இதுவரை எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை.

இதுவரை நடந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்களில், தேசிய அளவில் சாதனை படைப்பதாக அதிகமுறை பேசப்பட்டது சுகாதாரத் துறைதான். அதேநேரத்தில் மற்ற துறையினருக்கு எல்லாம் அவ்வப்போது ஊதிய உயர்வு அளித்து வரும் அரசு, அரசு மருத்துவர்களுக்கு மட்டும் உரிய ஊதியத்தைத் தர மறுத்து வருவது வருத்தமளிக்கிறது. இதற்கு முந்தைய கூட்டத் தொடரில் கரோனா ஆபத்தைப் பற்றி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கேள்வி எழுப்பியபோது, நம் அரசு மருத்துவர்கள் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர்கள், அதனால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று முதல்வர் பதிலளித்ததை இந்த நேரத்தில் நினைவுபடுத்துகிறோம்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளதாக முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் அடிக்கடி பெருமையாகக் கூறுகிறார்கள். அதேநேரத்தில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஊதியக் கோரிக்கைக்காக மருத்துவர் உயிரையே கொடுத்ததும், தொடர்ந்து தண்டனைகளையும், நெருக்கடிகளையும் அனுபவிப்பதும் நடக்கிறது.

தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், முன்னணி வீரர்களாகக் களத்தில் நின்று, உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காப்பாற்றும் மருத்துவர்களுக்கு, நீண்ட காலமாக குறைவான ஊதியம் வழங்கப்படுவதோடு, மருத்துவர்கள் தண்டனைக்கும் உள்ளாகிறார்கள். எவ்வளவு நிதிச்சுமை ஏற்பட்டாலும், மக்களின் உயிரைக் காப்பாற்றுவதே அரசின் கடமை என்று முதல்வர் உறுதிபடத் தெரிவிக்கிறார்.

ஆனால், மருந்துகளுக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும், சுகாதாரக் கட்டமைப்புக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக உள்ள அரசு, உயிர் காக்கும் மருத்துவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றத் தேவையான சம்பளத்தை மட்டும் பிடிவாதமாகத் தர மறுத்து வருவது எந்த வகையில் நியாயம்?

எனவே, கரோனா பரவல் தொடங்கிய பிறகு நடக்கும் சட்டப் பேரவையின் இந்த இரண்டாவது கூட்டத் தொடரில், தமிழகத்தின் பலமாகக் கருதப்படும் 18 ஆயிரம் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை, அரசு நிறைவேற்ற வேண்டும். குறுகிய காலக் கூட்டத் தொடராக இருந்தாலும் அரசு மருத்துவர்களின் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in