Published : 14 Sep 2020 11:51 AM
Last Updated : 14 Sep 2020 11:51 AM

‘அனுமதி இல்லை, வந்தால் தடுக்க வேண்டாம்’ - அரசின் நிலைப்பாட்டால் குமரியில் மக்கள் உற்சாகம்

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் உற்சாகத்தை வெளிப்படுத்திய சுற்றுலா பயணிகள்.

நாகர்கோவில்

கரோனா ஊரடங்கு தொடங்கிய மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த 5 மாதத்தில் மத்திய அரசின் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கன்னியாகுமரி தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக் கிறது. முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் நீராட வசதியாக கைப்பிடி சுவருடன் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சூரிய உதயத்தை ஒரே நேரத்தில் 8 ஆயிரம் பேர் பார்த்து மகிழும் வகையில் திறந்தவெளி காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்ட பத்திலும் பழுதான பகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. முக்கடல் சங்கமத்தில் இருந்து சூரிய அஸ்தமன மையம் வரையிலான கடற்கரை பகுதிகள் எங்கும் பூங்காக்கள், வண்ண விளக்குகள், இயற்கை எழிலுடன் கூடிய இருக்கைகள் என, வண்ண மயமாக காட்சியளிக்கின்றன. இதனால் கன்னியாகுமரி சுற்றுலா மையத்தை பார்வையிட எப்போது அனுமதி கிடைக்கும் என மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

கடந்த 1-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு, பேருந்து போக்குவரத்து தொடங்கியது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வரத்தொடங்கினர். அவர்கள் அப்படியே கன்னியா குமரி கடற்கரை பகுதிகளையும் சுற்றிப்பார்த்தனர். சில சமயம் போலீஸார் அவர்களை அனுமதி க்காமல் திருப்பி அனுப்பினர்.

தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரியை சுற்றிப் பார்க்கவும் அனுமதிக்குமாறு சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். தனிமனித இடைவெளி கேள்விக்குறியாகக் கூடும் என, அனுமதி அளிப்பதில் தாமதம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது கன்னியாகுமரிக்கு தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். கடற்கரை பகுதிகளை சுற்றிப் பார்த்து மகிழ்கின்றனர். போலீஸாரும் கெடுபிடிகளை தளர்த்தியுள்ளனர். கன்னியாகுமரி மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளது.

தடை உத்தரவு இல்லை

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் கூறும்போது, “ ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் வைத்திருந்தால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். கன்னியாகுமரியில் அரசு தரப்பில் சுற்றுலா பயணிகளுக்கான அனுமதி எதுவும் இதுவரை வரவில்லை. அதேநேரம் அனுமதிக்க வேண்டாம் என்ற உத்தரவும் இல்லை. தற்போது தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வரத்தொடங்கியுள்ளனர். அதேநேரம் பிற மாநில பயணிகள் யாரும் வரவில்லை” என்றார். எல்.மோகன்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x