Published : 21 Sep 2015 02:30 PM
Last Updated : 21 Sep 2015 02:30 PM

சோமாலியா போலீஸைவிட மோசமான நிலையில் தமிழக காவல்துறை: ராமதாஸ் கருத்து

ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானதாக போற்றப்பட்ட தமிழக காவல்துறை இப்போது சோமாலியா நாட்டு காவல்துறையைவிட மோசமான நிலைக்கு சென்றுவிட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறை மோசமான நிலைக்கு சென்றுவிட்டதாகக் கூறி அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நாளை நடைபெறவிருக்கிறது. இதற்கு ஜெயலலிதா பதிலளிக்க வேண்டும் என்பதற்காக கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற வேண்டிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 6 மாதம் தாமதமாக இப்போது நடைபெறவுள்ளது. இதில் காட்டிய ஆர்வத்தை காவல்துறையை மேம்படுத்துவதில் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானதாக போற்றப்பட்ட தமிழ்நாட்டு காவல்துறை இப்போது சோமாலியா நாட்டு காவல்துறையைவிட மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இழந்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. வேறு பல வழக்குகளிலும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமிழக காவல்துறைக்கு இதற்கு முன் இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டதில்லை. இவை அனைத்துக்கும் காரணம் காவல்துறை தவறாக வழி நடத்தப்படுவது தான். காவல்துறையின் திறன் மேம்பாட்டுக்காக அத்துறை அமைச்சர் ஜெயலலிதா துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் கூறலாம். தமிழக காவல்துறையில் 01.01.2015 நிலவரப்படி 21,110 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு லட்சத்து 20,996 பேர் இருக்க வேண்டிய காவல்துறையில் 99,896 பேர் மட்டுமே இருக்கிறார்கள். அதாவது 750 பேருக்கு ஒரு காவலர் மட்டுமே உள்ளார். காலியிடங்களை நிரப்புவதில் மட்டுமின்றி, பதவி உயர்வு வழங்குவதிலும் தாமதம் செய்யப்படுகிறது.

உதாரணமாக, தமிழக காவல்துறைக்கு தலைமை இயக்குனர் (DGP) மொத்தம் 6 பேர் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 2 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களிலும் சட்டம் & ஒழுங்குப் பிரிவு தலைமை இயக்குனரான அசோக் குமார் ஓய்வு பெற்று பதவி நீட்டிப்பில் தான் இருக்கிறார். அதேபோல், 5 கூடுதல் தலைமை இயக்குனர்கள் (ADGP), 14 காவல்துறை தலைவர்கள் (IG), 12 காவல்துறை துணைத் தலைவர்கள் (DIG) என ஏராளமான பதவிகள் காலியாக உள்ளன. இவற்றில் இரண்டாம் நிலைக் காவலர்களைத் தவிர மற்ற பணியிடங்களில் பெரும்பாலானவை பதவி உயர்வின் மூலம் நிரப்பட வேண்டியவை ஆகும். ஆனால், அதற்கான கோப்பில் கையெழுத்திட முதல்வருக்கு நேரமில்லை.

சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் காவலர்களும், உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர்களும் தான். காவலர்கள் நிலையிலேயே 17,000 பணியிடங்களும், உதவி ஆய்வாளர் நிலையில் 4200 பணியிடங்களும் காலியாக உள்ளன. பல ஆண்டுகளாக காலியாக கிடக்கும் இந்த இடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 23.04.2013 அன்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா 17,138 காவலர்கள், 1091 உதவி ஆய்வாளர்கள், 1005 தீயவிப்பு படை வீரர்கள் அந்த ஆண்டு இறுதிக்குள் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்தார். ஆனால், அதன்பின் 2 ஆண்டுகளும் 5 மாதங்களும் ஆகிவிட்ட நிலையில் இதுவரை காவலர்களோ, உதவி ஆய்வாளர்களோ நியமிக்கப்படவில்லை. 298 பெண் உதவி ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது. காவல்துறையின் செயல் வேகம் இந்த லட்சனத்தில் தான் இருக்கிறது.

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கூலிப்படையினரைக் கொண்டு செய்யப்படும் கொடூரக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. ரூ.1500 கொடுத்தால் கள்ளத் துப்பாக்கி வாங்கலாம் என்ற அவல நிலை நிலவுகிறது. குற்றங்களை துப்பு துலக்கி, குற்றவாளிகளை கைது செய்வதில் தமிழக காவல்துறைக்கு ஈடு இணை யாருமில்லை என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் 29.03.2012 அன்று திருச்சியில் கொடூரமாக கொல்லப்பட்டார். அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை இந்த வழக்கில் துப்புதுலங்கவில்லை. ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறையாக தமிழக காவல்துறை இருந்தால் அதன் செயல்பாடுகள் செயல்பாடுகள் நிச்சயமாக இப்படி இருக்காது.

2011-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை கிட்டத்தட்ட 9000 கொலைகளும், 88,500-க்கும் அதிகமான திருட்டு, கொள்ளைகள் நடந்துள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை, பாலியல் குற்றங்களில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தின் (Protection of Children from Sexual Offences Act - POCSO) 4 மற்றும் 6ஆவது பிரிவில் பதிவு செய்துவிட்டு தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களே நடக்கவில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் போக்கு தான் இங்கு நிலவுகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் குற்றங்கள், பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவை காவல்துறை இணையதளத்தில் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், குற்றங்கள் அதிகரிப்பது குறித்த தகவல்கள் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காக இணையதளத்தில் அந்த புள்ளி விவரங்களை வெளியிடுவதை அரசு நிறுத்திவிட்டது. ஏற்கனவே இருந்த தகவல்களையும் அகற்றி விட்டது. மிகவும் சிக்கலான வழக்குகளைக் கூட எளிதாக துப்புதுலக்கிய தமிழக காவல்துறை சீப்பை ஒளித்துவிட்டால் திருமணம் நின்றுவிடும் என்று நம்பும் நிலைக்கு வந்திருப்பது அவலம் தான்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சிக்கலில் பல மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மர்மங்களை விலக்க வேண்டுமானால் இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்ப வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு மறுப்பது அதன் நேர்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் தமிழக காவல்துறையை பற்றி பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை. காவல்துறையினரின் திறமையோ, நேர்மையோ குறைந்துவிட்டதாக கூற முடியாது. அவர்களை வழிநடத்துபவர்கள் தான் இத்தனை அவலத்திற்கும் காரணம். அவர்களை வரும் தேர்தலில் மக்கள் தண்டிப்பர் என்பது நிச்சயம்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x