Last Updated : 14 Sep, 2020 10:12 AM

 

Published : 14 Sep 2020 10:12 AM
Last Updated : 14 Sep 2020 10:12 AM

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முதல்நாள்: நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு ரத்து செய்யக் கோரி வளாகத்தில் திமுக எம்.பிக்கள் ஆர்பாட்டம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல்நாள் இன்று காலை துவங்கியது. இதற்கு முன்பாக அதன் வளாகத்தில் இருஅவைகளின் திமுக எம்.பிக்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்பாட்டம் நடத்தினர்.

மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளை திமுக எம்.பிக்கள் நீட்டுக்கு எதிரானப் போராட்டத்துடன் துவங்கினர். இன்று ஒரு நாளுக்கு மட்டும் என காலையில் துவங்கிய மக்களவை கூட்டத்திற்கு சற்று முன்பாக இப்போராட்டம் நடைபெற்றது.

காந்தி சிலை முன்பாக நடந்த இப்போராட்டம், திமுக எம்.பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது. கட்சியின் துணைத்தலைவரான கனிமொழியும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கோஷமிட்டார்.

இதில், மாநிலங்களவை மற்றும் மக்களவை எம்.பிக்கள் ஒன்றாகக் கூடி நின்று நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி ஆர்பாட்டம் நடத்தினர். இது குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பேனரை தம் கைகளில் பிடித்திருந்தனர்.

இப்போராட்டத்தில் ‘நீட் தேர்வை ரத்து செய்’, ’கொல்லாதே! கொல்லாதே! மாணவர்களை கொல்லாதே!’, ‘வஞ்சிக்காதே வஞ்சிக்காதே! மாணவர்களை வஞ்சிக்காதே!’, ஏழைப் பிள்ளைகளை வாழவிடு!’ ஆகிய கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மாநிலங்களவையின் மூத்த உறுப்பினரான திருச்சி சிவா கூறும்போது, ’12 ஆண்டுகளாகக் கற்ற கல்வி அறிவை தூர எரிந்து விட்டு வெறும் 3 மணி நேரம் சோதித்து மருத்துவக் கல்விக்கு மாணவர்களை தேர்வு செய்வது ஏற்கக் கூடியது அல்ல.

பொதுக்கல்வி இல்லாத நாட்டில் பொதுத்தேர்வு எப்படி நடத்த முடியும்? தனியார் பயிற்சி நிலையங்களில் பணம் கொடுத்து பயின்றவர்கள் மட்டுமே இதில் நீட்டில் தேர்வகின்றனர். இது, ஏழை, எளிய மக்களால் முடிவதில்லை. வெற்றி பெறும் அனைவருக்கும் மருத்துவக் கல்வியில் இடம் உண்டு எனும் உத்தரவதமும் கிடையாது.

நாட்டின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் அன்றி அதை மேலும் பின்னோக்கி இழுத்துச் செல்லவதாக இருக்கும் புதிய கல்விக்கொள்கையை கைவிட வேண்டும். இதில், உலகத்தரத்தில் அன்றி பிற்போக்குத்தனமான பல தன்மைகள் உள்ளன.

மும்மொழிக்கொள்கை திணிப்பு, கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை தவிர்க்கும் முயற்சி, பல்கலைகழகங்களின் தனித்தன்மையை வலிமையற்றதாக்குவது என பல மோசமான செயல்கள் அமைந்துள்ளன.

சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டில் அனைத்திற்கும் முரணான ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மாநிலக் கவுன்சிலுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படா விட்டால் அவர்களை மத்திய அரசே நியமிப்பது என்பது மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் செயல் ஏற்புடையதல்ல.’ எனத் தெரிவித்தார்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து எம்.பிக்களும் முகக்கவசம் அணிந்தபடி போராட்டத்தில் கலந்து கொண்டனர். திமுகவின் கூட்டணி சார்பில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் ஒரே ஒரு தமிழக எம்.பியான கே.நவாஸ்கனி கலந்து கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x