Published : 14 Sep 2020 08:15 AM
Last Updated : 14 Sep 2020 08:15 AM

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ரகளை: அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோரை தாக்க முயற்சி திருச்சியில் பரபரப்பு

அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் இளம்பெண்கள்- இளைஞர் பாசறை ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் இளம்பெண்கள்- இளைஞர் பாசறையின் மாநிலசெயலாளர் விபிபி.பரமசிவம், கட்சியின் அமைப்புச் செயலாளரும், அமைச்சருமான எஸ்.வளர்மதி உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு சாதி சங்கக் கொடியுடன் குழுவாக வந்த சிலர், கட்சிப் பொறுப்பு வழங்குவதில் தங்கள் சமூகத்தைப் புறக்கணிப்பதாகக் கூறி கூச்சலிட்டவாறு, நாற்காலிகள், ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவற்றை கீழே தள்ளி உடைத்தனர்.

பின்னர் அவர்கள் மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் மீதும் நாற்காலிகளை வீசியெறிந்ததுடன்,கொடிக் கம்பாலும் தாக்க முயன்றனர். ஆனால், அமைச்சர் வளர்மதி, மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி உள்ளிட்டோர் சுதாரித்துக் கொண்டு பின்னோக்கிச் சென்றனர். பின்னர், கட்சி நிர்வாகிகள் சிலர் அவர்களை சூழ்ந்து நின்று கொண்டு பாதுகாப்பாக மேடைக்கு பின்புறம் அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் நிர்வாகிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 30-க்கும் அதிகமான நாற்காலிகள் உடைந்து சேதமடைந்தன. ரகளையில் ஈடுபட்டவர்கள் வெளியேறியபின், கூட்டம் நடந்தது.

சம்பவம் தொடர்பாக மாவட்ட மீனவரணிச் செயலாளர் கண்ணதாசன் உள்ளிட்டோர் மீது ஸ்ரீரங்கம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x