Published : 14 Sep 2020 08:14 AM
Last Updated : 14 Sep 2020 08:14 AM

நீட் தேர்வில் 10 சதவீத உள் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் கோரிக்கை

நீட் தேர்வில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள 10 சதவீத உள் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறினார்.

திருப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு முறையான ஆலோசனை வழங்க வேண்டும். இதில் எதிர்க் கட்சியினருக்கும் பொறுப்பு உள்ளது.

பிளஸ் 2, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின்போது ஏற்படுவதுபோல, நீட் தேர்வின்போதும் மாணவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. தேர்வு பயத்தைப் போக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர் மற்றும் அரசியல்வாதிகளுக்கு உள்ளது. எனவே, திமுக தலைவர் ஸ்டாலின், நீட் போன்ற விவகாரங்களில் அரசியல் செய்யக் கூடாது.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்துக்கு மட்டும் நீட் தேர்வு நடத்தப்படுவதில்லை.

தற்போது தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனையும் வந்துள்ளது. எனவே, தமிழக மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசு கொண்டுவந்துள்ள 10 சதவீத உள் இடஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம். நீட் தேர்வில் இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

தற்போது பெரும்பாலான பள்ளிகளில் இந்தி மொழி கற்பிக்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும், மற்றொரு மொழியைப் படிக்கும் வாய்ப்பைப் பெற வேண்டுமென்பதே பாஜகவின் நோக்கம். எங்களது நிலைப்பாடு மும்மொழிக் கொள்கை. அதை நிறைவேற்ற வேண்டும்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு, சுமார் 75 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்தது. உள்ளாட்சித் தேர்தலிலும் அதிகமானோர் வெற்றி பெற்றுள்ளனர். பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்து, அனைத்து வயதினரும் தற்போது பாஜகவில் இணைந்து வருகின்றனர். எனவே, பாஜக தனித்துப் போட்டியிட்டாலும் 60 இடங்களில் வெற்றி பெறும்.

தமிழகத்தில் அதிமுக-பாஜகவிடையே சுமூக உறவு நீடிக்கிறது. தேர்தல் வரும்போதுதான் மாற்றங்கள் தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x