

ஈரோட்டில் அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா பங்கேற்றதால் திமுக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கூடுதல் பள்ளிக்கட்டிடம் மற்றும் ஆய்வகத்துக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவில் அமைச்சர்களுடன் இணைந்து திமுக முன்னாள் அமைச்சா் என்.கே.கே.பி.ராஜாவும் பங்கேற்றார்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் என்.கே.கே.பெரியசாமியின் மகனான ராஜா. திமுக ஆட்சியில் (2006-11) கைத்தறித்துறை அமைச்சராகவும், ஈரோடு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்தார். வழக்கு ஒன்றில் ராஜா சிக்கியதால், அவரது பதவி பறிக்கப்பட்டது.
இதன் பிறகு ஈரோடு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்த திமுக தலைமை தெற்கு மாவட்ட செயலாளராக சு.முத்துசாமியையும், வடக்கு மாவட்ட செயலாளராக நல்லசிவத்தையும் நியமித்தது. இதன்பிறகு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் என்.கே.கே.பி. ராஜா ஒதுங்கி இருந்து வருகிறார்.
இந்நிலையில் அமைச்சர்களுடன் விழாவில் அவர் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து என்.கே.கே.பி. ராஜாவிடம் கேட்டபோது, ‘திமுகவில் நான் உயர்ந்த பொறுப்புகளை வகித்தவன். கடந்த 6 ஆண்டுகளாக பொறுப்பு இல்லாமல் இருந்தாலும், கட்சி நிர்வாகிகளிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பவன். நான் திமுககாரன் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. இறக்கும்வரை இந்த கட்சியில்தான் இருப்பேன் என்று சொல்லி விட்டு, 3-வது நாளே கட்சி மாறுபவன் அல்ல.
விழா நடந்த அய்யம்பாளையம் எனது பாட்டியின் ஊர். இந்த ஊரைப் பொறுத்தவரை எனக்குத்தான் முதல்மரியாதை. அதனால், நான் விழாவில் பங்கேற்றேன்.
இதே அய்யம்பாளையத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலில், அதிமுகவை வீழ்த்தி திமுகவை வெற்றி பெறச்செய்தவன் நான் என்பதையும் ஞாபகப்படுத்துகிறேன்’ என்றார்.