

சரியாக 134 ஆண்டுகள் பழமைவாய்ந்த செங்கல்பட்டு நகராட்சியானது பெரியநத்தம், சின்ன நத்தம், குண்டூர், அனுமந்தபுத்தேரி மற்றும் மேலமையூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பஞ்சாயத்தாக 1886-ம்ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது, 1.2.1972-ம் தேதியிட்ட அரசாணை எண் 169-ன்படி 2-ம்நிலை நகராட்சியாகவும், 17.4.1984-ல்இருந்து முதல்நிலை நகராட்சியாகவும் மேம்படுத்தப்பட்டது.
2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 62,579 ஆக இருந்த மக்கள் தொகை, தற்போது சுமார் 1 லட்சமாகி இருக்கும் எனக் கருதப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 6.09 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட செங்கல்பட்டு நகராட்சியானது 300 தெருக்களை உள்ளடக்கிய 33 வார்டுகளோடு உள்ளது.
பெரிய அளவிலான தொழில் நிறுவனங்களோ, பன்னாட்டு நிறுவனங்களோ இங்கு இல்லாததால் வீட்டு வரி, சொத்து வரியினங்கள் மூலம் மட்டுமே நிர்வாகத்துக்கு வருவாய் வருகிறது. அடுத்ததாக, கடைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இடம்பெறுகின்றன.
போதிய நிதி ஆதாரம் இல்லாததால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஒவ்வொரு திட்டத்துக்கும், மாநில அரசிடம் இருந்து நிதி உதவியை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், அவற்றை நிறைவேற்றுவதில் நீண்ட காலதாமதம் ஏற்படுகிறது.
நகராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மட்டும் ரூ.10 கோடி வரை நிதி தேவைப்படும் நிலையில், ஆண்டுக்கு ரூ.4 கோடி மட்டுமே வருவாயாக கிடைக்கிறது. வரியினங்களை உயர்த்த முடியாத நிலையில், நகராட்சியின் எல்லைப் பகுதியை விரிவுபடுத்துவதன் மூலம் வருவாயைப் பெருக்குவது குறித்து, நிர்வாகம் ஆலோசித்து வந்தது.
இணைக்கப்படும் ஊராட்சிகள்
இதையடுத்து, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளஅஞ்சூர், சிங்கபெருமாள் கோயில்,குண்ணவாக்கம், பட்ரவாக்கம், வல்லம், ஆலப்பாக்கம், மேலமையூர்,ஒழலூர், பழவேலி, திம்மாவரம், ஆத்தூர், புலிப்பாக்கம், வீராபுரம்,செட்டிப்புண்ணியம் ஆகிய 14 ஊராட்சிகளை செங்கல்பட்டு நகராட்சியுடன் இணைக்க 15.12.2014-ல், நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவற்றில் வீராபுரம், குண்ணவாக்கம், அஞ்சூர் ஆகியஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், பன்னாட்டு தொழில்நுட்பப் பூங்கா அமைந்துள்ளது.
இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படும் வரியினங்கள் மூலம் நகராட்சிப் பகுதியில், அடிப்படை வசதிகளை தங்குதடையின்றி நிறைவேற்ற முடியும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மேற்கண்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதுகுறித்து அறிவிக்கப்படும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
எதிர்ப்பும், ஆதரவும்
இந்தத் திட்டத்துக்கு செங்கல்பட்டு நகரத்தில் உள்ள அரசியல் கட்சியினர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், 13 ஊராட்சிகளில் உள்ள அரசியல் கட்சியினர் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதில் அதிமுகதான் முழு எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. ஆனால் சமூக ஆர்வலர்கள், குடியிருப்புவாசிகள், தொழிற்சாலை நிர்வாகத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த இணைப்பினால் அரசியல் கட்சிகள் எந்தவகையிலும் லாபம் பார்க்க முடியாது என்பதால் எதிர்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சந்திரசேகர் கூறியதாவது:
ஊராட்சிப் பகுதிகளை செங்கல்பட்டு நகராட்சியுடன் இணைத்தால், பெருநகராட்சியாக தரம் உயரும். இதனால் அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி அதிகரிக்கும். எனவே 14 ஊராட்சிகளை இணைப்பது தொடர்பான அரசாணை வெளியிட்டு, அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வர் அறிவிக்க வேண்டும்.
இதுகுறித்து, கடந்த 2014-ல் அரசுக்கு கருத்துரு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.செங்கல்பட்டு புதிய மாவட்டமாக மாறியுள்ளதால், செங்கல்பட்டு நகராட்சியையும் பெருநகராட்சியாக மாற்ற வேண்டும் என்றார்.