

தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் தேமுதிக தொடர்ந்து பாடுபடும் என கட்சியின் 16-ம் ஆண்டு தொடக்க நாள் செய்தியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேமுதிக, தற்போது 16-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டு தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தொடங்கப்பட்ட தேமுதிக, தொடர்ந்து மக்கள் பணியாற்றி, தனக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ளது.
கரோனா பாதிப்பால் கடந்த 6 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதோடு பலர் உயிரை இழந்துள்ளனர். இந்த சூழலில் தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் தொடர்ந்து பல்வேறு உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகின்றனர். தேமுதிக தொடர்ந்து மக்களுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும்.
வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்பதை கருத்தில்கொண்டு, எதிர்காலத்தில் நம் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்போம். வரும் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சிறப்பான வெற்றியைப் பெற்று மக்கள் சேவை ஆற்ற வேண்டும். அதற்கு நாம் தயாராக வேண்டும். “இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே” என்ற தாரக மந்திரத்தின்படி தேமுதிக தொடக்க நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.