கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம்; கோயில்களில் திருமணம் நடத்தப்படாது: அறநிலையத் துறை அதிகாரி தகவல்

கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம்; கோயில்களில் திருமணம் நடத்தப்படாது: அறநிலையத் துறை அதிகாரி தகவல்
Updated on
1 min read

கரோனா வைரஸ் பரவல் காரணமாக முன்னெச்சரிக்கையாக கோயில்களில் திருமணம் நடத்த அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்து 120 கோயில்கள் உள்ளன. இவற்றில், வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்,குன்றத்தூர் முருகன் கோயில் உள்ளிட்டவற்றில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கோயில்கள் மூடப்பட்டன. தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் கடந்த 1-ம் தேதி கோயில்கள் திறக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, கோயில்களில் திருமணம் நடத்த அனுமதிஅளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கோயில் வளாகத்தில் திருமணம் நடத்த அனுமதி அளிக்கப்படுவதில்லை.

இதுதொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “கோயில்களில் தற்போது தரிசனத்துக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. திருமணம் நடத்துவதற்கு அனுமதி அளித்தால் கூட்டம் சேரும்போது கட்டுப்படுத்த முடியாது. ஒரு முகூர்த்தத்துக்கு ஒரு திருமணத்துக்கு மட்டுமாவது அனுமதி அளிக்கலாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அவ்வாறு ஒரு திருமணத்துக்கு அனுமதி அளித்து பிறருக்கு அனுமதி மறுக்கப்பட்டால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால்தான் கோயில் வளாகத்தில் தற்போது திருமணம் நடத்த அனுமதி அளிக்கப்படுவதில்லை. இயல்பான சூழல் திரும்பினால்தான் கோயில்களில் திருமணம் நடத்துவதற்கான அனுமதி கிடைக்கும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in