Published : 14 Sep 2020 06:43 AM
Last Updated : 14 Sep 2020 06:43 AM

கலைவாணர் அரங்கில் கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சட்டப்பேரவை இன்று கூடுகிறது: நீட், இடஒதுக்கீடு, கல்விக் கொள்கை விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கு கிறது. கரோனா பரவல் காரணமாக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு, ஓபிசி இடஒதுக்கீடு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களை திமுக உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று தெரிகிறது.

சட்டப்பேரவையில் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக அம்மாதம் 24-ம் தேதியுடன் கூட்டம் முடித்துவைக் கப்பட்டது. பேரவை விதிகளின்படி அடுத்த 6 மாதங்களில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது. அலுவல் ஆய்வுக் குழுவில் அறிவிக்கப் பட்டபடி இக்கூட்டம் 3 நாட்கள் நடத்தப் படுகிறது.

வழக்கமான பேரவை அரங்கில் சமூக இடைவெளியுடன் கூட்டம் நடத்துவது சாத்தியம் இல்லை என்பதால், கலை வாணர் அரங்கின் 3-வது தளத்தில் இக் கூட்டம் நடைபெறுகிறது. 1,000 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில், 6 அடி இடைவெளியில் 300-க்கும் மேற்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பேரவைத் தலைவருக்கான பாரம் பரிய இருக்கை, சட்டப்பேரவை அரங்கில் இருந்து எடுத்து வரப்பட்டு, கலைவாணர் அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. அங் கிருந்த மறைந்த முன்னாள் முதல்வர்கள், தலைவர்களின் படங்களும் கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டு, பேரவை அரங்கமாகவே மாற்றப்பட்டுள்ளது. 3-ம் தளத்தில் முதல்வர், அதிகாரிகள் அறை, 2-ம் தளத்தில் துணை முதல் வர், அமைச்சர்களுக்கான அறைகள், முதல் தளத்தில் பேரவைத் தலைவர், பேரவை செயலாளர் அறைகள், தரை தளத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட் டோருக்கான அறைகள் அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளன.

பேரவைக் கூட்டம் நடைபெறுவதால், கலைவாணர் அரங்கம் முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப் பட்டுள்ளது. 1500-க்கும் மேற்பட்ட போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். வளாகம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ள முதல்வர், துணை முதல்வர், எதிர்க் கட்சித் தலைவர் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் அனைவருக்கும் ஏற்கெனவே கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர் களைத் தவிர, பேரவைக் கூட்டம் நடை பெறும் 3-வது தளத்துக்கு செல்லும் அலுவலர்கள், ஊழியர்கள், செய்தியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பிரத்யேக அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

கூட்டத்தின் முதல்நாளான இன்று காலை 10 மணிக்கு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கன்னியாகுமரி எம்.பி. எச்.வசந்தகுமார், பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை ஒத்திவைக்கப்படும்.

15-ம் தேதி (நாளை) கேள்வி நேரம், பிறகு கவனஈர்ப்பு தீர்மானம், அது தொடர்பான விவாதம் நடைபெறும். 16-ம் தேதி காலை கேள்வி நேரம் முடிந்ததும் துணை பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அத்துடன், சமீபத்தில் வெளியிடப்பட்ட அவசர சட்டங்கள் தொடர்பான மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன. அத்துடன் கூட்டம் நிறைவடைகிறது.

2 நாட்கள் முழுமையாக பேரவைக் கூட்டம் நடக்க உள்ள நிலையில், நீட் தேர்வு, ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம், கரோனா தடுப்பு, புதிய கல்விக் கொள்கை போன்ற விவகாரங்களை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x