அலகாபாத்தில் வள்ளுவர் சிலை, ஹார்வர்டு பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைய வேண்டும்: கருணாநிதி

அலகாபாத்தில் வள்ளுவர் சிலை, ஹார்வர்டு பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைய வேண்டும்: கருணாநிதி
Updated on
2 min read

உத்தரப் பிரதேசம், அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமையவும், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமையவும், ஆர்வலர்கள் சிலர் மேற்கொண்டுள்ள முயற்சிகளை தமிழக அரசு ஊக்குவித்து உரிய முறையில் ஆதரவு அளித்திட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள சிலைகளையே ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி உள்நோக்கத்தோடு அகற்றுவதற்கான முயற்சிகள், தமிழகத்தில் மறைமுகமாக நடைபெற்று கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத் நகரிலே திருவள்ளுவர் சிலை ஒன்றினை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

தி இந்து தமிழ் நாளிதழில் இன்று இதுபற்றி விரிவாகச் செய்தி வெளிவந்துள்ளது. அந்தச் செய்தியில், யமுனை நதியின் தென்கரை சாலை இன்னும் பெயரிடப்படாமல் இருப்பதால் அதற்கு, திருவள்ளுவர் மார்க்கம் எனப் பெயர் சூட்டி, அங்கு திருவள்ளுவர் சிலையும் வைக்க வேண்டும் எனும் கோரிக்கை இருந்து வருகிறது என்றும், அங்குள்ள சுமார் ஆறு கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளில் மரக் கன்றுகள் நட்டு, அவற்றில் திருக்குறளை இந்தி மொழி பெயர்ப்புடன் எழுதி வைக்க வேண்டும் என்றும்; உத்தரப்பிரதேச மக்கள் நீண்ட காலமாகக் கோரி வருகின்றனர் என்றும் எழுதப்பட்டுள்ளது.

இதுபற்றி, தி இந்து விடம் சந்திர மோகன் பார்கவா என்பவர் கூறும்போது, “தமிழைக் கற்றுக் கொண்ட பாஷா சங்கத்தின் மறைந்த நிறுவனரும், பொதுச் செயலாளருமான டாக்டர் கிருஷ்ணசந்த் கவுடுவுக்கு திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் மீது அதீக ஈடுபாடு உருவானது. இதனால் அவர் அலகாபாத்தில் திருவள்ளுவருக்குச் சிலை வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை 1990இல் எழுப்பினார். திடீரென அவர் புற்றுநோயால் இறந்தபின், ஒவ்வொரு நிர்வாகக் குழுக் கூட்டத்திலும் வள்ளுவர் சிலை அமைப்பதற்கான முயற்சி தொடர வலியுறுத்தப் பட்டுவருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச அரசிடம் இது குறித்து கோரிக்கை வைத்த போது, “நகரில் அனைத்து மொழி மக்களும் வந்து செல்லும் இந்துஸ்தான் அகாடமி வளாகத்தில் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிய போதிலும், இந்த அமைப்பினர் தாங்கள் கேட்ட திரிவேணி சங்கமத்தில் தான் சிலை வைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இது போன்ற மற்றொரு பிரச்சினை ஒரு வார இதழிலே வந்துள்ளது. தமிழ்ச் சங்க இலக்கிய நூல்கள் பதினெட்டை வைதேகி ஹெர்பெர்ட் என்ற அமெரிக்கர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அவரை, பேராசிரியர் க.அன்பழகனின் உறவினரும், தற்போது அமெரிக்காவில் சிறந்த இதய மருத்துவராகப் பணியாற்றி வருபவருமான டாக்டர் ஜானகிராமன் சந்தித்து, தன் வாழ்நாளில் தமிழுக்காகச் சிறப்பு செய்ய நினைப்பதாகவும், என்ன செய்யலாம் என்றும் கேட்டார்,

“உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை கிடையாது, அப்படி ஓர் இருக்கை அமையுமானால் தமிழுக்குப் பெருமை, தமிழர்களுக்கும் பெருமை” என்று ஹெர்பர்ட் கூறியதால், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, ஹார்வர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்களோடும், துறைத் தலைவரோடும் அமெரிக்காவாழ் மருத்துவர்கள் ஜானகிராமனும், திருஞான சம்பந்தமும் அணுகிப் பல முறை பேசிய பின்னர், ஹார்வர்டு பல்கலைக் கழகம் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

இதற்கான முதலீடு ஆறு மில்லியன் டாலர்கள் (சுமார் 40 கோடி ரூபாய்); இதை இரண்டு ஆண்டு கால அவகாசத்துக்குள் திரட்ட வேண்டும். மருத்துவர்கள் ஜானகி ராமனும், திருஞானசம்பந்தமும் இணைந்து ஒரு மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளார்கள். மீதித் தொகையைத் திரட்ட உலகத் தமிழ்ப் பற்றாளர்கள் அதற்கான முயற்சியிலே ஈடுபட்டுள்ளார்கள் என்று வார இதழ் எழுதியுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் 30 மில்லியன் மக்கள் பேசும் உக்ரேனிய மொழிக்கே இரண்டு இருக்கைகளும், 1.5 மில்லியன் மக்கள் தொகை மட்டுமே பேசக் கூடிய செல்டிக் மொழிக்குக் கூட அங்கே இருக்கைகள் இருக்கும்போது, ஹிப்ரு, சமஸ்கிருதம் போன்ற மற்ற மொழிகளுக்கும் அங்கே இருக்கைகள் இருக்கும்போது, சுமார் 80 மில்லியன் மக்கள் பேசும் செம்மொழியாம் தமிழ் மொழிக்கு அங்கே இருக்கை உருவாக வேண்டாமா?

எனவே உத்தரப் பிரதேசம், அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமையவும், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமையவும், ஆர்வலர்கள் சிலர் மேற்கொண்டுள்ள முயற்சிகளை தமிழக அரசு ஊக்குவித்து உரிய முறையில் ஆதரவு அளித்திட வேண்டும்.

ஐந்தாண்டு கால ஆட்சி முடியவிருக்கின்ற நேரத்தில் முதலீட்டாளர் மாநாடு ஒன்றை நடத்துவதற்காக 100 கோடி ரூபாய் பெருநிதியைச் செலவிட முன்வரும் இந்த அரசு, தமிழின் மேன்மையைப் பரப்பிடும் இத்தகைய சிறப்பான செயல்களிலும் ஈடுபட வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in