

சென்னையில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் 2 வழித் தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. வண்ணாரப்பேட்டையில் தொடங்கி உயர் நீதிமன்றம், அண்ணா சாலை, சைதாப்பேட்டை வழியாக விமான நிலையம் வரை 24 கி.மீ. தூரத்துக்கு முதல் பாதையும் (சுரங்கப் பாதையாக), சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரை (உயர்த்தப்பட்ட வழித்தடமாக) 22 கி.மீ. தூரத்துக்கு 2-வது பாதையும் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை பணிகள் முடிந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வண்ணாரப் பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் தற்போது கிடைத்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடத்தை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு தமிழக அரசு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது மத்திய அரசின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து, இத்திட்டப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அதிகாரிகளுடன் 3 கட்டங்களாக ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். அதன்படி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய நகர்ப்புற அமைச்சக அதிகாரிகளுடன் முதல்கட்ட ஆலோசனை நடத்தினோம். இதையடுத்து, மத்திய செயலாளருடனும், இறுதியில் மத்திய அமைச்சரவையுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.
வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மொத்தம் 8 மெட்ரோ ரயில் நிலையங் கள் அமைக்கப்பட உள்ளன.
இதில், 2 ரயில் நிலையங்கள் சுரங்கத்திலும், தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், திருவொற்றியூர், விம்கோ நகர் உட்பட 6 ரயில் நிலையங்கள் மேல்மட்டப் பாதையிலும் அமைக்கப் படுகின்றன. ரூ.3,770 கோடியில் இத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளை மேற்கொள் வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்ய 3 மாதங்களில் டெண்டர் வெளியிடப்படும்.