

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திருச்சியில் இரு வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள், மாணவர் அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மேலும், கல்வியாளர்கள் பலரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நிகழாண்டுக்கான நீட் தேர்வு இன்று (செப். 13) நடைபெறவிருந்த நிலையில், இந்தத் தேர்வுக்கு தயாராகி வந்த ஒரு மாணவி உட்பட 3 பேர் நேற்று (செப். 12) ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டனர். இதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கம் தமிழ்நாட்டில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் இன்று இரு வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டங்களில், "நீட் தேர்வு என்ற பெயரில் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய அரசு பாழாக்குகிறது. நீட் தேர்வுக்குத் தமிழக மாணவர்கள் பலியாவதும் தொடர்கிறது. எனவே, தமிழ்நாட்டில் நீட் தேர்வை அனுமதிக்காத வகையில், சிறப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். மேலும், நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் உயிரிழப்புக்கு உரிய நீதியை அரசு வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது.
மறியல்
பாலக்கரை ரவுண்டானா பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையில் ஆர்ப்பாட்டமும், சாலை மறியலும் நடைபெற்றன.
ஆர்ப்பாட்டம்
திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பா.லெனின், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கே.மோகன் ஆகியோர் தலைமையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் இருவர் தங்கள் கழுத்தில் தூக்குக்கயிற்றை மாட்டியிருந்ததுடன், தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் உருவப்படங்களை தங்கள் முகத்தில் ஒட்டியிருந்தனர்.
மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற வாசகம் எழுதப்பட்ட முகக்கவசத்தையும் சிலர் அணிந்திருந்தனர்.