

புதுச்சேரியில் நீட் தேர்வுக்காக காலையிலேயே மாணவ, மாணவிகள் பெற்றோருடன் தேர்வு மையங்களில் குவிந்தனர். தேர்வு மையங்கள் கிராமப்பகுதியில்தான் அதிகளவில் இருந்த சூழலில் சிறப்பு பேருந்து போக்குவரத்தை அரசு ஏற்பாடு செய்யவில்லை. கடந்தாண்டை விட தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையும் சரிந்திருந்தது.
புதுச்சேரி தேர்வு மையத்தில் புதுவை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் என மொத்தம் 7,137 பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
அதன்படி, இன்று (செப். 13) புதுச்சேரியில் கோரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி, காலாப்பட்டு கேந்திரிய வித்யாலயா பள்ளி, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மணக்குள விநாயகர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, விவேகானந்தா சிபிஎஸ்இ பள்ளி உள்ளிட்ட 15 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. மதியம் 2 மணிக்குத் தொடங்கிய தேர்வு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் சுமார் 7,000 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதையொட்டி தேர்வு மையங்களில் காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
முன்னதாக, இத்தேர்வில் பங்கேற்க மாணவ, மாணவிகள் 3 மணி நேரத்துக்கு முன்பே தேர்வெழுதும் மையங்களுக்கு வந்தனர். கரோனா தொற்று காரணமாக தேர்வர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 11 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு 90 மாணவர்கள் வீதம் பரிசோதிக்கப்பட்டு தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவிகளுக்கும் வழக்கத்தை விட கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருந்தன.
முதலில் ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டன. உடல் வெப்பநிலை 99.4 டிகிரிக்கு அதிகமாக இருந்தவர்கள் தனி அறையில் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தேர்வு மையங்களில் தனிமனித இடைவெளியுடன் ஒரு அறைக்கு 12 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை சார்பில் முகக்கவசம் அளிக்கப்பட்டது. தேர்வர்கள் 50 மி.லி. கிருமிநாசினி, கையுறை, ஆவணங்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் காலை முதல் மாலை வரை தேர்வு மையத்தின் வெளியே பெற்றோர்கள் காத்திருந்தனர்.
மாணவர்களின் பெற்றோர் தரப்பில் கூறுகையில், "கடந்தாண்டு 10 மையங்களில் 7,245 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். ஆனால், இம்முறை 7,137 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இது கடந்தாண்டை விட சரிவுதான்.
புதுவையில் பெரும்பாலான மையங்கள் கிராம பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளன.இதனால் காலையிலேயே இருசக்கர வாகனத்தில் பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்தனர். சிலர் காரிலும், வாடகை காரிலும் வந்தனர். காரைக்காலில் இருந்து புதுச்சேரி தேர்வு மையங்களுக்கு வர பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால், புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரியில் தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் வர சிறப்பு பேருந்துகளை இயக்கவில்லை. வழக்கமாக இயங்கும் பேருந்துகள் கரோனா காலத்தில் இல்லாதது சிரமமாக இருந்தது" என்றனர்.
பழுதான பேருந்து; தவித்த மாணவர்கள்
புதுச்சேரி மையங்களில் காரைக்காலை சேர்ந்த மாணவர்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக புதுவை சாலை போக்குவரத்துக் கழகம் சார்பில் காரைக்காலில் இருந்து மாணவர்களை அழைத்துக்கொண்டு பேருந்து ஒன்று காலை 9 மணியளவில் புறப்பட்டது. இப்பேருந்தில் நீட் தேர்வு எழுத உள்ள 40 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் பயணித்தனர்.
பேருந்து தரங்கம்பாடி அருகே வந்தபோது திடீரென பிரேக் டவுன் ஆனது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் பதற்றம் அடைந்தனர். காலை 11 மணிக்குத் தேர்வு நடைபெறும் இடத்தில் மாணவர்கள் இருக்க வேண்டும் என்பதால் அவர்களின் பதற்றம் அதிகமானது. இதனிடையே புதுவையில் இருந்து காரைக்கால் சென்ற பேருந்தை நிறுத்தி அதில் மாணவர்களும் பெற்றோர்களும் ஏறி தேர்வு நடைபெறும் இடத்திற்கு பகல் 12,15 மணிக்கு புதுச்சேரி வந்து சேர்ந்தனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு நடத்த தமிழகம் மற்றும் புதுவையில் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரவித்து வருகின்றனர்.
நீட் தேர்வு அச்சத்தில் தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ராஜா திரையரங்கம் காமராஜர் சிலை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.