

ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இன்று (செப். 13) இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. புதுச்சேரியில் க்உள்ள 15 நீட் தேர்வு மையங்களில் மூலக்குளத்திலுள்ள தனியார் கல்லூரி வளாகமும் ஒன்று. அங்கு தேர்வுக்காக மாணவர்களும், பெற்றோரும் கூடியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது. மேலும், தேர்வு எழுத கல்லூரி வளாகத்திற்குள் மாணவ, மாணவிகளை அனுப்பி விட்டு பெற்றோர் கல்லூரி வாசலில் கூட்டமாக நின்று இருந்தனர்.
அப்போது அந்த வழியே வந்த முதல்வர் நாராயணசாமி, காரில் இருந்து இறங்கி வந்தார். அப்போது அங்கிருந்த பெண்மணி ஒருவர், "இங்கு தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தொற்று ஏற்படுமோ என அச்சமாக இருக்கிறது" என்று வருத்தத்துடன் முதல்வரிடம் முறையிட்டார்.
அதற்கு முதல்வர் நாராயணசாமி, "இதற்காகத்தான் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிடம் கூறினேன். ஆனால், மத்திய அரசு கேட்கவில்லை. இப்போது பெற்றோரும் மாணவர்களும் தான் அவதிப்படுகிறார்கள். கூடுதலாக காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு மத்திய அரசுக்கும் பலமுறை கோரிக்கை வைத்தும் நிராகரித்துள்ளனர். மாணவர்கள் உயிரோடு மத்திய அரசு விளையாடுகிறது. தற்போது மாணவர்களும் பெற்றோரும் அவதிப்படுவதை மத்திய அரசு நேரடியாக பார்க்கிறது. மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்தாக நீட் ரத்து செய்யப்படும்" என்று தெரிவித்தார்.