Last Updated : 13 Sep, 2020 02:01 PM

 

Published : 13 Sep 2020 02:01 PM
Last Updated : 13 Sep 2020 02:01 PM

புதுச்சேரியில் நீட் தேர்வெழுதச் சென்ற காரைக்கால் மாணவர்கள்; சிறப்புப் பேருந்துகள் மூலம் அனுப்பி வைப்பு

புதுச்சேரியில் இன்று நீட் தேர்வெழுதச் சென்ற காரைக்காலைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்புப் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக பொதுப் போக்குவரத்து இல்லாத சூழலிலும், மாணவர்கள் தேர்வெழுத பாதுகாப்பாக சென்று வரவேண்டும் என்ற நோக்கிலும், காரைக்கால் மாவட்டத்திலிருந்து புதுச்சேரி, கடலூர் மையங்களுக்கு ஜே.இ.இ, நீட் தேர்வெழுதச் செல்லும் மாணவர்களுக்குக் காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகளுக்குப் பொது முடக்க தளர்வு அறிவிப்புக்கு முன்பாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், பேருந்தில் செல்ல விரும்பிய மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அதன்படி ஜே.இ.இ. தேர்வுக்கு மாணவர்கள் சிறப்பு பேருந்துகள் மூலம் சென்று வந்தனர்.

இன்று (செப்.13) காரைக்கால் மாவட்டத்திலிருந்து நீட் தேர்வெழுதச் சென்ற மாணவ, மாணவிகள் சுமார் 250 பேர் 10 பேருந்துகள், 2 வேன்கள் மூலம் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதுச்சேரியில் 15 தேர்வு மையங்களுக்கும், கடலூரில் 7 மையங்களுக்கும் இப்பேருந்துகள் மூலம் பயணக் கட்டணமின்றி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, தேர்வு முடிந்தவுடன் அங்கிருந்து மீண்டும் காரைக்காலுக்கு அழைத்துவரப்படுவார்கள். மாணவர்களுடன் பெற்றோர்கள் சுமார் 100 பேர் சென்றனர்.

காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹரிகா பட் ஆகியோர் காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் மாணவர்களுக்கு முகக்கவசம், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கி மாணவர்களை வழியனுப்பி வைத்தனர்.

நீட் தேர்வெழுதச் சென்ற மாணவர்களை அழைத்துச் சென்ற பேருந்து போக்குவரத்துக்கான செலவு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படுகிறது.

இதனிடையே காரைக்காலிலிருந்து புறப்பட்டுச் சென்ற பேருந்துகளில் ஒன்று நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பழுதாகி நின்றது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் அச்சமடைந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் பழுது நீக்கம் செய்யப்பட்டு பேருந்து புறப்பட்டுச் சென்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x