

நாட்டு மாடுகளே நமது பாரம்பரிய இனம். அழிந்து வரும் நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில், பல்வேறு வகையான நாட்டு மாடுகளை வளர்ப்பதோடு, சாணம், பஞ்சகவ்யத்தில் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரித்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி.
நாட்டு மாடுகள் மூலம் அதிகம் பால் உற்பத்தி செய்ய முடியாது என்பதால், நாட்டு மாட்டில் இருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வருகிறார் விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டியைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி சங்கர் (35).
இதுகுறித்து அவர் கூறியதாவது: எங் கள் வீட்டில் பல ஆண்டுகளாக மாடு வளர்த்ததால் சிறு வயதில் இருந்தே எனக்கு கால்நடை வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நாங்களும் பாலுக்காகத்தான் மாடு வளர்த்தோம். அதிக பால் வேண்டும் என்பதற்காக ஜெர்ஸி ரக மாடுகளையும் வளர் த்தோம்.
நான் எம்பிஏ முடித்து தனியார் நிறுவனங்களில் 10 ஆண்டுகள் வேலை செய்தேன். ஆனால், அதில் முழு திருப்தி ஏற்படவில்லை. பணியில் இருந்து விலகி நாட்டு மாடுகளை வளர்க்க விரும்பினேன். நாட்டு மாடுகள் சம்பந்தமாக நிறைய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை படித்தேன். பின்னர், அதனை மட்டுமே வளர்க்கத் தொடங்கினேன். நாட்டு மாட்டில் இருந்து கிடைக்கும் பஞ்சகவ்யத்தைக் கொண்டு என்னென்ன மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதை பல இடங்களுக்கும் சென்று பார்த்து கற்றுக்கொண்டேன்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நாட்டு இனம் உண்டு. அது அந்த மாநிலத்தின் அடையாளமாகவும் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நாட்டு இனம் உண்டு. இவற்றை வளர்ப் பதால் அதிக பால் எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும் நாட்டு இனங்களை காப்பாற்ற வேண்டும். அப்போது தான் தற்சார்புடன் இருக்க முடியும். குறைவான பால் மட்டுமே தரும் நாட்டு மாட்டை கொண்டு எப்படி லாபகரமாக செயல்பட முடியும் என நினைத்தேன். இதற்காக நாக்பூரில் உள்ள பயிற்சி மையத்தில் இருந்து பஞ்சகவ்யத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி பெற்றேன்.
கடந்த 6 ஆண்டுகளாக நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறோம். தற்போது தேனி மலைமாடு, மீசல் மாடு, புளியங்குளம் மாடு, காங்கேயம் மாடு உள்பட 20 நாட்டு மாடுகள் உள்ளன.
வீட்டுத் தேவைக்காக மட்டும் தான் பால் கறப்போம். சாணம் மற்றும் பஞ்சகவ்யத்தில் இருந்து சோப், பல்பொடி, தைலம், காதணி, பினாயில், மருந்து பொருளான அர்க் போன் றவற்றை தயாரித்து வருகிறேன். இயற்கை அங்காடிகள் மற்றும் சென்னை, பெங்களூரு போன்ற ஊர்களுக்கு அனுப்பி விற்பனை செய் கிறோம்.
இதுதொடர்பாக பலருக்கும் பயிற்சியும் அளிக்கிறேன். பொலிகாளை இருந்தால் தான் நிறைய நாட்டு இன கன்றுகளை உரு வாக்க முடியும். ஒரு பொலிகாளை என்பது நூற்றுக்கணக்கான நாட்டு மாடுகள் இருப்பதற்கு சமம். எனவே, ஒரு பொலிகாளையையும் வளர்த்து வருவதாகத் தெரிவித்தார் சங்கர்.