Published : 13 Sep 2020 12:34 PM
Last Updated : 13 Sep 2020 12:34 PM

செங்கோட்டையில் அரசு சுவர்களில் இலக்கிய ஓவியங்கள்

செங்கோட்டையில் அரசு சுவர்களில் வரையப்பட்டுள்ள தமிழ் இலக்கியங்கள் தொடர்பான ஓவியங்கள். படம்: த.அசோக்குமார்

தென்காசி

அரசு சுவர்கள் என்றால் போஸ்டர்கள், அரசியல் கட்சி விளம்பரங்கள் போன்றவற்றுக்கு குறை இருக்காது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் விரும்பினாலும், அது சாத்தியமற்றதாகவே ஆகிவிடுகிறது.

சுவர்களை சுத்தப்படுத்தினாலும் மீண்டும் போஸ்டர்கள், விளம்பரங்கள் ஆக்கிரமித்துவிடுகின்றன. இந்த நிலையை மாற்ற தென்காசி நகரில் உள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகள், காவல்துறை, நகராட்சி, வருவாய்த் துறையினர் களத்தில் இறங்கினர்.

அரசு சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றி, சுவர்களை சுத்தப்படுத்தினர். ஓவியத்தில் ஆர்வம் உள்ள மாணவர்கள் தங்கள் கைவண்ணத்தை சுவர்களில் காட்டினர். இதனால், பல்வேறு சுவர்கள் ஓவியங்களால் அழகு பெற்றுள்ளன.

தென்காசியில் ஆரம்பித்த இந்த சுவர் ஓவியம் அருகில் உள்ள மற்ற ஊர்களுக்கும் பரவி வருகின்றன. சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் உள்ள அரசு சுவர்களில் இயற்கைக் காட்சிகள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட பல்வேறு ஓவியங்களை வரைந்து சுவர்களை அழகுபடுத்தியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக செங்கோட்டை நகரிலும் சுவர்களில் ஓவியங்களைத் தீட்டி வருகின்றனர்.

காவல்துறை, மழை நண்பர்கள் குழுவினர் மற்றும் மாணவர்கள் இணைந்து கடந்த சில நாட்களாக சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றிவிட்டு, தூய்மைப்படுத்தி ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.

போஸ்டர்களை அகற்றும் பணியை தென்காசி டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பேருந்து நிலையம், சுற்றுலா மாளிகை உட்பட பல்வேறு அரசு சுவர்களில் ஓவியங்களை வரைந்துள்ளனர்.

பள்ளி சுவர்களில் கல்வி சம்பந்தப்பட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும், சங்க இலக்கிய கதாபாத்திரங்கள், விலங்குகள், அவ்வைக்கு அதியமான் நெல்லிக்கனி வழங்கிய காட்சி, முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, பாண்டிய மன்னனிடம் கண்ணகி முறையிடும் காட்சி, கல்லணை கட்டிய கரிகாலன் படம், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.

போஸ்டர் ஒட்டாதீர்

இதுகுறித்து மழை நண்பர்கள் கூறும்போது, “நகரை அழகுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றிவிட்டு, ஓவியங்களால் அழகுபடுத்தி வருகிறோம்.

மாணவர்கள் வரைந்து அனுப்பிய ஓவியங்களை மாதிரியாகக் கொண்டு ஓவியர்களால் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊரிலும் உள்ள இளைஞர்கள், தன்னார்வலர்கள் தங்கள் பகுதியை அழகுபடுத்தினால் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அழகுபடுத்தப்பட்ட சுவர்களில் மீண்டும் போஸ்டர்களை ஒட்டாமல் இருக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x