Published : 13 Sep 2020 12:31 PM
Last Updated : 13 Sep 2020 12:31 PM

முக்கூடலில் நெல் அறுவடை பணிகள் தீவிரம் அரசு கொள்முதல் செய்யாததால் நஷ்டம்: தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்கும் விவசாயிகள்

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெறும் நிலையில், அரசு கொள்முதல் செய்யாததால் தனியாரிடம் குறைந்த விலைக்கு விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வட்டாரங்களில் இவ்வாண்டு விளைவித்த நெல்லுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். போதுமான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசுத் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தனியாரிடம் விற்க வேண்டிய நிர்பந்தம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

கல்லிடைக்குறிச்சி பகுதியில் 800 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு 10 ஆண்டுகளாக செயல்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இவ்வாண்டு அமைக்காதது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. பல கி.மீ. தூரத்திலுள்ள அயன்சிங்கம்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நெல் கொள்முதல் நிலையத்திலும் கடந்த சில வாரங்களுக்கு முன் மழையில் நெல்மூட்டைகள் நனைந்து சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் முக்கூடல் பகுதியில் தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்படும் நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

ஒரு கிலோ ரூ.13

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மாரிசெல்வம் கூறும்போது, “நெல், சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். அதிகளவில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. நெல் அறுவடை தற்போது நடைபெறுகிறது. அறுவடை செய்யப்படும் நெல் கிலோவுக்கு ரூ.13 என்ற விலையில் தனியாரிடம் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்திருந்தால் கிலோவுக்கு ரூ.20.50 வரை விவசாயிகளுக்கு கிடைத்திருக்கும். சோளமும் கிலோ ரூ.40-க்கு தனியாரிடம் விற்பனை செய்யப்படுகிறது” என்றார்.

நடவடிக்கை எடுக்கவில்லை

திருநெல்வேலி மாவட்ட விவசாய சங்கத் தலைவர் பி.பெரும்படையார் கூறும்போது, “மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கடந்த மார்ச் மாதத்திலேயே நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. கார் பருவத்தில் எங்கு, எத்தனை ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெற்றது என்ற புள்ளிவிவரங்களை தயாரித்து அரசுக்கு முன்கூட்டியே தெரிவித்து, தேவையான இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x