

விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடாக பயனாளிகளாக சேர்க்கப்பட்ட 8,650 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள தாக மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது.
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஊக்க நிதியுதவியாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழு வதும் விவசாயிகள் பெயரில், உரிய தகுதியில்லாத ஏராளமானோர் முறைகேடாக இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டதன்பேரில் தொடர் புடைய மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 15 ஆயிரம் பேர் புதிதாக இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து விவசாயிகளின் உண்மைத்தன்மை குறித்து வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 8,650 பேர் முறைகேடாக இத்திட்டத்தில் இணைந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்ட ரூ.4.30 கோடியை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முதல் கட்டமாக இதுவரை ரூ.50 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையைப் பெற்று அரசு கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.