

கரோனாவுக்குப் பின் உலகின் வர்த்தக சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், இந்தியா- ஜப்பான் இடையே ஜவுளி வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டெக்ஸ் டிரென்ட் ஆயத்த ஆடை கண்காட்சி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. ஜப்பான் நாட்டுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் தொடங்கி வைத்து பேசும்போது, "கரோனாவுக்கு பின், ஒரு நாட்டை மட்டுமே சார்ந்திருக்கக்கூடாது.
வெவ்வேறு நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும் என்ற உணர்வு, ஜப்பான் நிறுவனங்களிடையே மேலோங்கியுள்ளது. இதனால் இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான ஜவுளி வர்த்தகம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஜப்பானின் சிறந்த வர்த்தகராக இந்தியா மாற முடியும்.
ஆயத்த ஆடை, ஆபரணப் பொருட்களுக்கு, சர்வதேச அளவில் சிறந்த மற்றும் நம்பிக்கை யான வர்த்தக மையமாக இந்தியா உள்ளது. இந்திய ஜவுளி அமைச்சகம் மற்றும் ஜப்பானின் நிசென்கென் தர மதிப்பீட்டு மையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக இரு நாடுகளும் விருப்பத்துடன் உள்ளன. இந்த ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும்" என்றார்.
இதுதொடர்பாக ஏஇபிசி தலைவர் ஏ.சக்திவேல் கூறும்போது, "நாட்டின் ஆடை ஏற்றுமதிக்கு மிக முக்கியமான சந்தை ஜப்பான். சீனா நீங்கலாக மற்ற ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிக்க ஜப்பான் நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. வாய்ப்புகளை பயன்படுத்தி, ஜப்பானுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க, இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். உலகளவில் ஜப்பானிய நிறுவனங்கள் மீது, நேர்மறையான உணர்வு அதிகரித்து வருகிறது" என்றார்.
30 அரங்குகளுடன் நேரடியாக மற்றும் மெய்நிகர் என இரு வேறு வடிவங்களில் கண்காட்சி நடக்கிறது. இந்திய நிறுவனங்கள், ஏராளமான ஆடை ரகங்களை காட்சிப்படுத்தி யுள்ளன. ஜப்பான் வர்த்தகர்கள் ஆன்லைனிலும், நேரடியாக அரங்குகளை பார்வையிட்டும், ஆடை விசாரணைகள் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.இதுவரை 800 பையர்கள் பார்வையிட்டு வர்த்தக விசாரணை செய்துள்ள னர். அக்.30-ம் தேதி வரை இக்கண்காட்சி நடை பெறுகிறது.