Published : 13 Sep 2020 11:15 AM
Last Updated : 13 Sep 2020 11:15 AM

ஆவாரம்பாளையம் சாலை ‘பிபிஎல் கார்னர்’ சந்திப்பில் விதிமீறும் வாகனங்கள்

கோவை மாநகரில் வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலைகளில், ஆவாரம்பாளையம் சாலை ‘பிபிஎல் கார்னர்’ சந்திப்பு பகுதியும் ஒன்றாகும். பீளமேடு பகுதியில் இருந்து காந்திபுரம் செல்லும் வாகன ஓட்டுநர்கள், அவிநாசி சாலையில் நவஇந்தியா பிரிவில் வலதுபுறம் திரும்பி, திட்ட சாலை வழியாக ‘பிபிஎல் கார்னர்’ சந்திப்பை கடந்து செல்கின்றனர்.

அதேபோல, காந்திபுரத்தில் இருந்து பீளமேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்வதற் கும், ஆவாரம்பாளையம் சாலை வழியாக கணபதிக்கு செல்வதற்கும் இந்த வழித்தடத்தை வாகன ஓட்டுநர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அரசுப் பேருந்துகளும் இவ்வழியாக இயக்கப்படுகின்றன.

இந்த சந்திப்பை சுற்றிலும் மருத்துவமனை, தனியார் நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் ஏராளமாக உள்ளன. காந்திபுரம் சாலை, சத்தி சாலை, அவிநாசி சாலையை இணைக்கும் பகுதியாக உள்ள ‘பிபிஎல் கார்னர்’ பகுதியில் ‘பீக்ஹவர்ஸ்’ எனப் படும் காலை, மாலை நேரங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது.

இங்கு போக்குவரத்து போலீஸாரை நியமித்து வாகனங்களை ஒழுங்கு படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக, ஆவாரம்பாளை யத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் ப.ராஜ்குமார் கூறும்போது, ‘‘பிபிஎல் கார்னர்’ சந்திப்பு பகுதியில் முன்பு போக்குவரத்து சிக்னல் இருந்தது. பின்னர், மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டதால் சிக்னல் அகற்றப்பட்டது. பாலம் கட்டி முடித்த பிறகும் சிக்னல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. போக்கு வரத்து போலீஸாரும் இல்லை. இதனால் பாலத்தின் கீழ் சாலையின் நான்கு பகுதிகளில் இருந்தும் வரும் வாகன ஓட்டுநர்கள், விதிகளை கடைபிடிக்காமல், இஷ்டத்துக்கு முந்திக்கொண்டு செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, பிபிஎல் கார்னர் சந்திப்பில் போக்குவரத்து போலீஸாரை நியமிக்க மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மாநகர கிழக்குப் பிரிவு போக்கு வரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,‘‘ போக்குவரத்து காவலர்களுக்கு சுழற்சி முறையில் பணியிடம் ஒதுக்கி வருகிறோம். மேற்கண்ட சந்திப்பு பகுதியில் போக்குவரத்து போலீஸாரை ‘பீக் ஹவர்ஸ்’ நேரங்களில் நிறுத்த உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோ சித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x