

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தனது குலதெய்வக் கோயிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய கோப்புகளை வைத்து சிறப்பு வழிபாடு செய்தார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறுவதையொட்டி, துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தார். அங்குஓ.பன்னீர்செல்வத்துக்கு பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயில் யானை மற்றும் குதிரைக்கு உணவு வழங்கிய ஓ.பன்னீர்செல்வம், ஸ்ரீ ஆண்டாளையும், ரெங்கமன்னாரையும் தரிசனம் செய்தார். எம்எல்ஏக்கள் சந்திரபிரபா (ஸ்ரீவில்லி.), ராஜவர்மன்(சாத்தூர்) மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதன் பின் செண்பகத்தோப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குலதெய்வமான பேச்சியம்மன் கோயிலில் துணை முதல்வர் சிறப்பு வழிபாடு செய்தார். அங்கு முக்கிய கோப்புகளை வைத்து சிறப்பு பூஜை செய்தார்.
அமைச்சர் வரவில்லை
அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்களால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, கட்சியின்விருதுநகர் மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, அவரை வரவேற்க கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அரசியல் தொடர்பான எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பும் தனது குலதெய்வக் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது குலதெய்வக் கோயிலுக்கு வந்து முக்கிய கோப்புகளை வைத்து வழிபாடு நடத்தியுள்ளார்.
அந்த கோப்புகளில் உள்ளவிவரங்கள் குறித்து கட்சி நிர்வாகிகள் யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. கட்சியில் மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான கோப்புகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் துணை நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். அவை தொடர்பான கோப்புகளாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.