Published : 13 Sep 2020 07:37 AM
Last Updated : 13 Sep 2020 07:37 AM

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ‘விஜயபாரதம்’ ஆசிரியர் ம.வீரபாகு மறைவு

ம.வீரபாகு

சென்னை

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்தமுழுநேர ஊழியரும், ‘விஜயபாரதம்’ வார இதழ் ஆசிரியருமான ம.வீரபாகு, கரோனா தொற்றால் நேற்று காலமானார். அவருக்கு வயது 71.

திருநெல்வேலியில் பிறந்த ம.வீரபாகு, கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஆர்எஸ்எஸ் முழுநேரஊழியரானார். கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு வந்தார். 1975-ல்நெருக்கடி நிலையை எதிர்த்து இளைஞர்களை திரட்டி போராடியதால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத்தில் மாநில அமைப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார். வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மக்கள் வழிபாட்டுக்காக சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய மக்களை திரட்டி போராடி வெற்றி கண்டவர்.

கடந்த 10 ஆண்டுகளாக விஜயபாரதம் வார இதழின் ஆசிரியராக இருந்து, அதன் நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். அமைப்பு பணிகளில் தேர்ந்தவரான அவர், ஏராளமான ஆர்எஸ்எஸ் ஊழியர்களை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீரபாகு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு உடல்நிலை மோசமானதால், நேற்று அதிகாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 11.40 மணிக்கு உயிரிழந்தார். வில்லிவாக்கம் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

ம.வீரபாகு மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ‘‘அளப்பரிய ஆற்றல், வயதுக்கு மீறிய இளமை, உலகறியா தியாகம், திட்டமிடும் நேர்த்தி என்று சாதனை படைத்தவர் வீரபாகு" என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x