

பைபர் படகில் கடலுக்கு சென்று, அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் குறைகளை கேட்டறிந்தார்.
மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று காலை சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிக்கு சென்றார். அப்போது, சில மீனவர்கள், கடலில் மீன் பிடித்துக்கொண்டு கரை திரும்பினர். அவர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர், மீன்பிடி தொழிலில் போதிய வருவாய் கிடைக்கிறதா, மீன்பிடி தொழிலை மேற்கொள்வதிலோ, மீன்களை சந்தைப்படுத்துவதிலோ ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்று கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து, பைபர் படகில் கடலுக்கு சென்ற அமைச்சர், அண்மை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை சந்தித்தார். அவர்களிடம் அண்மை கடல் பகுதிகளில் மீன்வளம் அதிகரித்துள்ளதா, மீன் பிடிப்பின்போது பாதுகாப்பு உபகரணங்களை எடுத்துச் செல்கிறீர்களா என்று கேட்டறிந்தார். அமைச்சர் திடீரென கடலுக்கு வந்து குறைகளை கேட்டது மீனவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.