Published : 13 Sep 2020 07:10 AM
Last Updated : 13 Sep 2020 07:10 AM

கரோனா அச்சத்தால் பயணிகளின் வருகை குறைவு; அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 60 சதவீதம் வருவாய் இழப்பு: சுங்க கட்டணம், சாலை வரி விலக்கு அளிக்க கோரிக்கை

சென்னை

கரோனா அச்சத்தால் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 60 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஒரு ஆண்டுக்கு சுங்கக் கட்டணம், சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று அரசு போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசு போக்குவரத்துத் துறையின்கீழ் சென்னை, விழுப்புரம், கும்பகோணம் உட்பட மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டபேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, கரோனா ஊரடங்குகாரணமாக பல மாதங்களாக நிறுத்தப்பட்ட பேருந்துகளின் சேவை கடந்த 1-ம் தேதி முதல் படிப்படியாக தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கரோனா முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்றி 50 சதவீதபயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், கரோனா அச்சம் காரணமாக பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளதால், போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் பெரிய அளவில் குறைந்துள்ளது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

அரசு பேருந்துகள் வழக்கமாக ஓடினாலே, வருவாய் செலவுக்கான இடைவெளியில் கணிசமான அளவுக்கு வருவாய் இழப்பு இருக்கும். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.43 வசூலானால் மட்டுமே வருவாயும், செலவும் சரிசமமாக இருக்கும். கரோனாவுக்கு முந்தைய நிலவரப்படி ஒரு கி.மீ பேருந்து ஓடினால் ரூ.33 தான் வசூலானது. கரோனா பாதிப்புக்கு முன்பு தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் ஒரு நாள் மொத்த வசூல் ரூ.25 கோடியாக இருந்தது.

தற்போது 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கரோனா அச்சம் காரணமாக பயணிகளின் வருகை குறைவாக இருப்பதால், பெரும்பாலான வழித்தடங்களில் பேருந்துகள் காலியாகவே செல்கின்றன. இதனால், அரசுபோக்குவரத்து கழகங்களின் வருவாய் 50 முதல் 60 சதவீதம் வரைகுறைந்து விட்டது. வேறு வழியில்லாமல் அரசு போக்குவரத்து கழகங்கள் கடன் வாங்கித்தான் செயல்பட்டு வருகின்றன. எனவே, பொது போக்குவரத்து வசதியை பாதுகாக்கும் வகையில் சாலை வரி மற்றும் சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து அடுத்த ஒரு ஆண்டுக்கு மத்திய, மாநில அரசுகள் விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா ஊரடங்கு காலத்தில், பெரும்பாலான மக்கள் இருசக்கர வாகனங்களை அதிகமாக வாங்கி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால், நகரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் கூட்டமின்றி காணப்படுகிறது.

ரயில், ஆம்னி பேருந்துகளின் சேவை மீண்டும் தொடங்கிவிட்டால் மேலும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, பயணிகளை மீண்டும் பேருந்துகளுக்கு ஈர்க்கும் வகையில் கூடுதல் வசதியை ஏற்படுத்த வேண்டும். குறைந்த கட்டணம் கொண்ட சாதாரண பேருந்துகளை அதிகரிக்க வேண்டும். தேவைப்பட்டால் கட்டண சலுகையும் வழங்கினால் பயணிகள் வருகை அதிகரிக்கும்’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x