

தமிழகம் முழுவதும் பாலியல் வன்முறையில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக, உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த ஆர். சங்கர்கணேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இவற் றைத் தடுக்க குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தை (போக்ஸோ) 2012-ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்தது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவ ங்கள் நடைபெற்றால், இந்த சட்டத்தின்கீழ் தான் வழக்குபதிவு செய்ய வேண்டும். ஆனால், போலீஸார் இ.பி.கோ பிரிவுகளில் வழக்குபதிவு செய்கின்றனர்.
போக்ஸோ சட்டத்தின் பயன்பாடு குறித்து தொடர்ச்சியாக விளம்பரம் செய்யவும், பொது மக் கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கு.சாமித்துரை வாதிடும்போது, போக்ஸோ சட்டத்தை முறை யாக அமல்படுத்தினால் குழந் தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுப்பதுடன், அதில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை பெற்று கொடுக்க முடியும் என்றார்.
தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தாக்கல் செய்த பதில் மனுவில், போக்ஸோ சட்டத்தை அமல்படுத்துவது குறித்து, இதுவரை 208 பயிற்சி வகுப்புகள், 586 விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் மூலமாக குழந்தைகளின் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். குழந்தைகள் பாலியல் சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மாநிலம் முழுவதும் குழந்தை களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமையைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.
20 லட்சம் குழந்தைகள்
வணிகரீதியாக பாலியல் தொழிலில் 5 முதல் 15 வயதுள்ள 20 லட்சம் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
அந்த மனுவில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 8,945 குழந்தைகள் காணாமல் போகின்றன. 5 லட்சம் குழந்தைகள் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தற்போது வணிகரீதியாக 5 முதல் 15 வயது வரையுள்ள 20 லட்சம் குழந்தைகளும், 15 முதல் 18 வயது வரையுள்ள 33 லட்சம் குழந்தைகளும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாலியல் தொழிலாளர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள். அதில் 80 சதவீதம் பேர் புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் நகரங்களில் உள்ளனர். இவர்களில் 71 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். 53 சதவீதம் பேர் பணத்துக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 50 சதவீத குழந்தைகள் உறவினர்களாலேயே பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.