Published : 12 Sep 2020 09:20 PM
Last Updated : 12 Sep 2020 09:20 PM

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரணம்: மாநகராட்சி மூலம் பெறுவது எப்படி?- ஆணையர் விளக்கம்

கரோனா தடை உத்தரவு காலம் அமலில் உள்ள நிலையில் தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவித்துள்ள ரூ.1000/- நிவாரணத் தொகை, சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் எப்படி பெறுவது என்பது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையரின் செய்திக்குறிப்பு:

“கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழ்நாடு முதல்வர் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிவாரணத் தொகையாக ரூ.1000 வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் உள்ள 23,841 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.38 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார நிதி ரூ.1000/- ரொக்கம் வழங்கும் திட்டம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (நீல நிற அட்டை) வைத்திருக்கும் சென்னை மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.1000/- நிவாரண நிதி ரொக்கமாக வழங்குவதற்காக, மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் கோட்டம் மற்றும் பகுதி வாரியாக பெறப்பட்டு, அவர்களுக்கு நிவாரண நிதி தொகையான ரூ.1000/- இதுநாள் வரை 23,841 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,38,41,000/- வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனா தடை உத்தரவு காலத்தில் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் உட்பட சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது விவரங்களை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு வரும் மாநகராட்சி களப்பணியாளர்களிடம் மாற்றுத்திறனாளிகளுக்கான நீல நிற தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகல் ஆகிய சான்றுகளை தங்கள் இருப்பிடத்திற்கு வந்து நிவாரணத்தொகை வழங்கும் களப்பணியாளர்களிடம் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விவரங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் 044-24714758 என்ற எண்ணில் அலுவலக நேரங்களிலும், 18004250111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொண்டு மேற்படி திட்டத்தில் பயனடையுமாறு ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.
இவ்வாறு மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x