விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கட்சிகள் கோரிக்கை: பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நிராகரிப்பு

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கட்சிகள் கோரிக்கை: பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நிராகரிப்பு
Updated on
2 min read

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்ற தமிழகக் கட்சிகளின் கோரிக்கையை, முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்.

சட்டப்பேரவையில் அவர் அளித்த விளக்கத்தில், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கானது சிபிஐ விசாரிக்கும் அளவுக்கு மிகச்சிக்கலான வழக்கு அல்ல என்றும், சிபிசிஐடி-யே இந்த வழக்கில் நடுநிலையுடன், விரைவாக புலன் விசாரணை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை தேவை என்ற கோரிக்கையையொட்டி, சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்வர் ஜெயலலிதா பேசியது:

"காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய ஏதுவாக அவ்வழக்கு தற்போது மாநில குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கும் விஷ்ணுபிரியா புலன்விசாரணை செய்து வந்த கோகுல்ராஜ் கொலை வழக்கும் மாநில குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்பிரிவினர் இவ்வழக்குகளைத் தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, விஷ்ணு பிரியா தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை குறித்து எந்த அவசியமும் எழவில்லை. சிபிஐ விசாரணை தான் சரியான பாதையில் இருக்கும் என்பதும், சிபிசிஐடி விசாரணை அவ்வாறு இருக்காது எனக் கூறுவதும் தவறான கருத்து என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சிபிசிஐடி பிரிவால் சிறுவன் தில்ஷன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த உமா மகேஸ்வரி கொலை, மருத்துவர் எம்மா கோன்சால்வேஸ் கொலை போன்ற வழக்குகள் சரியாக புலன்விசாரணை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இங்கே நான் சுட்டிக் காட்டியது ஒரு சில உதாரணங்கள்தான்.

சிபிஐ விசாரணை மட்டுமே நேர்மையான விசாரணை என்ற கருத்து சரியானது அல்ல. அகில இந்திய அளவில் பரபரப்பாக உள்ள ஒரு முக்கிய வழக்கில் சிபிஐ முன்னாள் இயக்குநர் மீதே குற்றம் சுமத்தப்பட்டு உச்ச நீதிமன்ற விசாரணையிலும் அது உள்ளது என்பதை இங்கு நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஒரு சில வழக்குகள் உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகே சிபிஐ-யால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

வெளிநாட்டுக் கார் இறக்குமதி வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில், தமிழகத்தில் ஒருவரை சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் சிபிஐ கைது செய்து விசாரணை செய்தது. அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. ஆனால் அதே குற்றச்சாட்டுக்கு உள்ளான வேறு சிலரை சிபிஐ கைது செய்யவில்லை.

வழக்கறிஞர் சங்கர சுப்பு மகன் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணை செய்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் விவரங்களை தாக்கல் செய்து, வழக்கை முடிவுக்குக் கொண்டு வர கோரியது. இதனை ஏற்றுக்கொள்ளாத சென்னை உயர் நீதிமன்றம் 7.12.2012 தேதியில், பணி நிறைவு செய்த காவல் துறை உயரதிகாரி ராகவன் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டு அந்த விசாரணை இன்னமும் நிலுவையில் உள்ளது.

உடுமலைப்பேட்டை காவல் துறையினரால் சந்திரா என்பவர் துன்புறுத்தப்பட்டதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டில் சென்னை உயர்நீதிமன்றம் 24.9.2014 அன்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னரும், சிபிஐ இந்த விசாரணையை முடிக்கவில்லை.

எனவே, சிபிஐ விசாரணையே சரியானதாக இருக்கும் என சொல்லப்படுவது ஒருவருடைய தனிப்பட்ட கருத்து தானே தவிர உண்மை நிலையின் அடிப்படையில் சொல்லப்படுவது அன்று.

எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தவேண்டிய அவசியமில்லை. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கானது சிபிஐ விசாரிக்கும் அளவுக்கு மிகச்சிக்கலான வழக்கு அல்ல. சிபிசிஐடி-யே இந்த வழக்கில் நடுநிலையுடன், விரைவாக புலன் விசாரணை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in