

‘‘தற்கொலையை வைத்து திமுக அரசியல் செய்வது அநாகரீகத்தின் உச்சக்கட்டம்,’’ என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பாஜக மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடந்தது.
இதில் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பேசியதாவது:
எங்களுக்கும் ஸ்டாலின், கனிமொழிக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருமொழிக் கொள்கையா, மும்மொழிக் கொள்கையா என வரும்போது தான் பிரச்சினை ஏற்படுகிறது.
தமிழகத்திலும் பாஜக ஆட்சியை பிடிக்கும். தமிழக பாஜகவினருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும், என்று பேசினார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீட் தேர்விற்காக மாணவர்கள் தற்கொலை செய்வது துரதிஷ்டமானது. தற்கொலையை வைத்து திமுக அரசியல் செய்வது அநாகரீகத்தின் உச்சக் கட்டம்.
பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் நீட் தேர்வு குறித்து மாணவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி தற்கொலைக்கு தூண்டுகின்றன. எத்தனையோ பேர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
அப்படி என்றால் தமிழ் நாட்டில் காதலிப்பது குற்றமா? காதல் செய்பவர்கள் தண்டனைக்குரியவர்களா? காதலை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஸ்டாலின் பேசுவாரா? என்று கூறினார்.
கூட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், தொழில்நுட்ப பிரிவு அணி பொதுச் செயலாளர் செல்வராஜ், மாவட்டத் தலைவர் செல்வராஜ், மேற்கு மண்டலத் தலைவர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.