Published : 12 Sep 2020 08:09 PM
Last Updated : 12 Sep 2020 08:09 PM

அரசுப் பள்ளிகளுக்கு விளம்பரம்; ஆசிரியர்களுக்கு ஊக்கம்: ஏ3 ஆசிரியர்கள் குழுவின் நூதன முயற்சி

ஏ3 குழு

காலத்துக்கு ஏற்பத் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் சில அடிப்படை விஷயங்கள் மாறுவதில்லை. அக்கம்பக்கத் தகவல் பரிமாற்றம், ரேடியோ, தொலைக்காட்சிகள் மூலம் விழிப்புணர்வு என்றிருந்த காலம் போய் ஃபேஸ்புக் நேரலை வழியே அரசுப்பள்ளிகளின் மேன்மை குறித்தும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகள் பற்றியும் பகிரப்படுகின்றன. அதை அந்தந்த ஆசிரியர்கள் மூலமாகவே உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் பணியை முன்னெடுத்து வருகிறது அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் (ஏ3) என்னும் குழு.

அரசுப் பள்ளிகளை விளம்பரப்படுத்தும் வகையில் ஆசிரியர்களை நேரலையில் பேச வைக்கும் இந்த முயற்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த நேரலை, ஏ3 குழுவின் ஃபேஸ்புக் பக்கத்தில் காலை 10 மணி முதல் 11 மணி வரை தினந்தோறும் நடைபெறுகிறது. இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் தொடங்கி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் ஆசிரியர் வெவ்வேறு தலைப்பில் பேசுகிறார்.

ஃபேஸ்புக் நேரலையை முன்னெடுத்த இக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் அரசுப் பள்ளி ஆசிரியருமான உமா மகேஸ்வரி, இதுகுறித்த பயணத்தை 'இந்து தமிழ்' இணைய தளத்திடம் பகிர்ந்துகொண்டார்.

அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குழு

2015-ல் தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து ஆரம்பிக்கப்பட்ட குழு அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குழு. தொழில்நுட்பம் அனைத்துத் தரப்பினரையும் அவ்வளவாகச் சென்றடையாத காலகட்டம் அது. நம்முடைய பக்கத்து மாவட்டத்து ஆசிரியர்கள் பற்றிக்கூட அதிகம் தெரியாது.

அப்போது ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தங்களுடைய செயல்பாடுகளைப் பகிர்ந்துகொள்ள ஒரு களமாக ஏ3 குழுவை உருவாக்கினோம். மாநிலம் முழுவதிலும் இருந்து இதில் இணைந்த ஆசிரியர்கள் தகவல், திறன் பரிமாற்றங்கள், தங்களின் எண்ணங்களை அமல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இது ஆசிரியர்கள் அடுத்தடுத்த கட்டத்துக்குப் பயணிப்பதற்கான ஆரம்பப் புள்ளியாக இருந்தது.

ஆண்டுதோறும் ஒருமுறை என 4 முறை ஒன்றுகூடி ஆசிரியர்களுக்கான மேடையில் மென்மேலும் எங்கள் திறன்களை உயர்த்திக் கொள்கிறோம். யதேச்சையாக உருவாக்கப்பட்ட ஏ3 குழுவால், மிகப்பெரிய ஆசிரியப் பயணம் தொடங்கியுள்ளது.

தொடரும் உதவிகள்

எங்கள் குழுவின் மூலம் க்ரியா பதிப்பகம் சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பிலான கதைப் புத்தகங்கள் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏழைக் குழந்தைகளின் கல்லூரிப் படிப்புக்காகத் தன்னார்வலர்கள் மூலம் ஆண்டுதோறும் உதவி வருகிறோம். குரோம்பேட்டையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கால்பந்து பயிற்சிக்கான நிதியுதவியும் வழிகாட்டலும் வழங்கப்பட்டு வருகிறது. பன்னாட்டுக் கார் நிறுவனத்தின் சார்பில் 25 கணிப்பொறிகள் மற்றும் 8 மடிக்கணினிகள், தேவையுள்ள மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. பிற அறக்கட்டளைகளுக்கு மாணவர்களை அறிமுகப்படுத்தி ஒருங்கிணைக்கும் பணியையும் ஏ3 குழு செய்துவருகிறது'' என்றார் உமா மகேஸ்வரி.

ஃபேஸ்புக் நேரலையில் ஆசிரியர்கள் பேசும் திட்டம் குறித்தும் அதன் எதிரொலி குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர் உமா மகேஸ்வரி. ''75 ஆசிரியர்களைத் தாண்டி நேரலை வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கிறது. தனியார் பள்ளியோடு ஒப்பிடுவதைத் தாண்டி அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, கற்றல் இணைச் செயல்பாடுகள் என அரசுப் பள்ளிகளை விளம்பரப்படுத்தவே இதைத் தொடங்கினோம். அத்துடன் ஆசிரியர்கள், தாங்கள் கடந்து வந்த பாதை குறித்தும் பேசுவார்கள்.

அதிகம் கண்டுகொள்ளப்படாத ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம்

தொடர்ந்து அங்கீகாரம் பெற்றவர்களை விடுத்து, இன்னும் வெளியிலேயே வராதவர்களைக் கண்டுபிடித்துப் பேச வைக்கிறோம். குறிப்பாக அதிகம் கண்டுகொள்ளப்படாத தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல், குழந்தைளை அவர்கள் அணுகும் முறை, உளவியல் செயல்பாடுகள் குறித்துப் பகிரச் சொல்கிறோம்.

பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களும் நேரலையில் பேசுகின்றனர். இதைப் பார்க்கும் பார்வையாளர்கள் அரசுப் பள்ளிகளில் இத்தனை வசதிகள் இருக்கின்றதா, இத்தனை நாட்களாகத் தெரியாமல் போய்விட்டதே என்று கமெண்ட்டிலேயே பதிவிடுகின்றனர். ஏதேனும் சந்தேகமெனில் கேள்விகளைக் கமெண்ட்டில் கேட்கின்றனர்.

நேரலை என்பதால் ஆசிரியர்கள் முதலில் தயக்கத்துடன் எதிர்கொள்கின்றனர். எனினும் முந்தைய நாளே வெளிச்சம், இணைய வசதி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சோதித்துக் கொள்வேன். தயக்கத்தை உடைக்கத் தேவைப்பட்டால் ஒருமுறை பேசிப் பார்ப்பார்கள். நேரலையில் பேசிக் கொண்டிருக்கும்போது போனுக்கு அழைப்புகள் வந்தால் நேரலையின் தொடர்பு அறுந்துவிடும். இதுபோன்ற சில நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி, 75 நாட்களைக் கடந்து பயணித்து வருகிறோம்.

நேரலைக்கு முன்பு ஆசிரியரின் புகைப்படம், பள்ளி குறித்த சிறப்பம்சங்களை முன்வைத்துப் பதிவு போடுவோம். அது அவரது ஃபேஸ்புக் பக்கத்திலும் நண்பர்கள் குழுவிலும் பகிரப்படும். ஆரம்பத்தில் சராசரியாக 1000 பேர் நேரலையைப் பார்த்தார்கள். தற்போது தினந்தோறும் 3,500 பேர் வரை பார்க்கின்றனர். ஆசிரியர்களுக்கும் இது ஊக்கமளிப்பதாக உள்ளது.

நேரலை எதிரொலி...
திருநெல்வேலியில் இருந்து காந்திராஜன் என்னும் ஆசிரியர் நேரலையில் ஏழ்மை நிலையில் விடாமுயற்சியுடன் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவன் குறித்துப் பேசினார். அதைப் பார்த்த அமெரிக்கவாழ் தமிழர், உடனடியாக அந்த ஆசிரியருக்கு ரூ.10,000 அனுப்பி உதவச் சொன்னார். மேலும் 5 ஏழை மாணவர்களைத் தத்தெடுத்துக் கொண்டார்.

சிவகாசியைச் சேர்ந்த ஜெயமேரி என்னும் ஆசிரியரின் நேரலையைப் பார்த்துவிட்டு, தன்னார்வ அமைப்பு ஒன்று பள்ளிக் குழந்தைகளுக்காக பென் டிரைவ், ஸ்பீக்கர் வசதியுடன் கூடிய மெகா போனைப் பரிசளித்துள்ளது. 50 பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டைகள், பேரிச்சம் பழம், பிரெட் பாக்கெட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன. உதவிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. பல்வேறு ஊடகங்களும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை அணுகி, அவர்களின் சேவையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. துல்கல் நூலகம் சார்பில் பழங்குடியினக் குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மொத்தத்தில் இந்த ஃபேஸ்புக் நேரலை, அரசுப் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என முத்தரப்பினருக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது'' என்றார் ஆசிரியர் உமா மகேஸ்வரி.

க.சே. ரமணி பிரபா தேவி தொடர்புக்கு--> ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x