Last Updated : 12 Sep, 2020 06:24 PM

 

Published : 12 Sep 2020 06:24 PM
Last Updated : 12 Sep 2020 06:24 PM

முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம்: என் தனிப்பட்ட உத்தரவு அல்ல; காவல்துறை தவறான தகவலை பரப்பக்கூடாது; புதுச்சேரி முதல்வர்

முதல்வர் நாராயணசாமி: கோப்புப்படம்

புதுச்சேரி

முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பது அரசின் உத்தரவு என்றும் தன் தனிப்பட்ட உத்தரவு அல்ல என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (செப் 12) கூறும்போது, ‘"தற்போது 3,800 பேருக்கு உமிழ்நீர் எடுக்கின்ற நிலையை நாம் எட்டியுள்ளோம். அதனை 5,000 ஆக மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய இலக்கு. கிராமப்புறங்களில் உள்ள துணை சுகாதார மையங்களில் காய்ச்சல், சளி, இருமல், வேறு வியாதி இருக்கிறதா என்பதை கண்காணித்து முடிவு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

திங்கள்கிழமை முதல் நடாமாடும் மருத்துவ மையங்களை 25 ஆக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். இப்போது இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கரோனா தொற்று உள்ளவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் பாதிப்பை தடுத்துள்ளோம். அதிகப்படியான பரிசோதனைகள் செய்யவும், இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் கவனம் செலுத்தி வருகிறோம்.

தனியார் மருத்துவமனைகள், தனியாக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் தங்களிடம் வருபவர்களுக்குக் காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை இருந்தால் அவர்களின் விவரங்களை அரசுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அதிகப்படியான கரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது.

இதனால் அதிகப்படியான படுக்கைள் தேவைப்படுகின்றன. அதனை உயர்த்த நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவிகள் தங்கியுள்ள இடங்களில் எல்லாம் படுக்கைகளாக மாற்றி அதிகப்படியான கரோனா நோயாளிகள் தங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 400 படுக்கைகள் அங்கு இருக்கின்றன. அதனை 900 படுக்கைகளாக மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 500, 600 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி நேரடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலர் முகக்கவசம் அணியாமல் சென்றால் காவல்துறையினர் அபராதம் விதிக்கிறார்கள். அதற்காக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் சில காவல்துறை பணியாளர்கள் முதல்வர் தான் அபராதம் விதிக்க சொன்னார் என்று ஒரு தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர். இது அரசின் உத்தரவு. என்னுடைய தனிப்பட்ட உத்தரவல்ல.

ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் குறிப்பிட்ட அளவு அபராதம் விதிக்க வேண்டும் என்று எந்த உத்தரவு போடவில்லை. ஆனால், காவல்துறையினர் தவறான தகவலை பரப்பி எங்களுடைய அரசுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வேலையை செய்து வருகின்றனர். இந்த புகார் தொடர்ந்து பல பகுதியிலிருந்து எனக்கு வருகிறது. முகக்கவசம் அணிந்து செல்வோருக்கும் அபராதம் விதிக்கின்றனர்.

மக்கள் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த அபராதம் போடப்படுகிறது. அதற்காக முகக்கவசம் அணிந்தவர்களுக்கு அபராதம் கட்ட சொல்வதை ஏற்க முடியாது. காவல்துறை தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். மக்களுக்குத் தவறான தகவலை கொடுக்கக் கூடாது. தேவையில்லாமல் மக்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது. என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி அரசுக்கும் எனக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துகின்ற வேலையை காவல்துறை செய்யக் கூடாது_ என நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x