கரோனாவால் உயிரிழந்த நெல்லை மாநகர் தச்சநல்லூர் உதவி காவல் ஆய்வாளர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி

கரோனாவால் உயிரிழந்த நெல்லை மாநகர் தச்சநல்லூர் உதவி காவல் ஆய்வாளர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி

Published on

நெல்லை மாநகர் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றிய முருகன் கரோனா தொற்றுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அவருக்கு காவல்துறையினர் 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.

நெல்லை மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் முருகன். ( வயது 58 ) குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் உதவி காவல் ஆய்வாளர் முருகன்.

கரோனா காலத்தில் கூட முன்கள வீரராக தாழையூத்து சோதனைச் சாவடியில் பணியாற்றி வந்தவர். முறையான அனுமதியின்றி எந்த ஒரு வாகனத்தையும் தன்னைத் தாண்டி செல்ல அனுமதிக்காதவர்.

முன்கள வீரராக தன் கடமையை மிகச் சிறப்பாக பணியாற்றி வந்த முருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உதவி ஆய்வாளர் முருகன் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உதவி காவல் ஆய்வாளர் முருகனின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வீட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் முருகனின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இறுதியாக காவல்துறை சார்பில், பணியில் இருக்கும்போது கரோனாவுக்கு எதிராக போராடி உயிர் நீத்த உதவி காவல் ஆய்வாளர் முருகனுக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் கரையிருப்பு பகுதி மயானத்தில் எரியூட்டப்பட்டது. இறுதி சடங்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உதவி காவல் ஆய்வாளர் முருகனுக்கு தங்களது இறுதி அஞ்சலி செலுத்தினர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in