

ஊட்டிக்குச் சுற்றுலா வருபவர்கள் ‘சுற்றுலா இ-பாஸ்’ பெற்றிருக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 9-ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்திருக்கும் நிலையில், பயணிகள் வரத்து குறைவாகவே உள்ளது. மக்களிடம் கரோனா அச்சம் இன்னமும் விலகாததுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள் நீலகிரிவாசிகள். இ-பாஸ் வாங்குவது சிரமம் என்பதால் கூட்டம் குறைவாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
நீலகிரியின் முக்கிய வருவாயில் தேயிலை உற்பத்திக்கு அடுத்த இடத்தில் இருப்பது சுற்றுலா. இந்நிலையில், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டன. வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டதால் கடந்த 6 மாதங்களாகச் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இடையிடையே பொதுமுடக்கத் தளர்வு, மண்டல அளவில், மாவட்ட அளவில் பேருந்துகள் அனுமதி என்றெல்லாம் தளர்வுகள் வந்தாலும் நீலகிரியைப் பொறுத்தவரை பணிக்கு வருபவர்கள், வியாபாரிகள் தவிர்த்து கேளிக்கை நோக்கோடு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. சுற்றுலா நோக்கோடு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மாவட்ட எல்லையோரச் சோதனைச் சாவடிகளிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அதையும் மீறி நீலகிரிக்குள் வந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபாரதமும் விதிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் கடந்த 9-ம் தேதி முதல் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பொதுப் பூங்காக்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைப் பூங்காக்கள் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கப்பட்டன.
இதையொட்டி நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, “நீலகிரிக்குச் சுற்றுலா வருபவர்களுக்காகவே ‘இ-பாஸ் டூரிஸம்’ என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்குள் வரலாம். ஏற்கெனவே ரிசார்ட்கள், ஓட்டல்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. டூரிஸ்ட் இ-பாஸூடன் வருபவர்களைத் தங்க அனுமதிக்கலாம். தற்போது தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட இடங்களை மட்டும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. படகு இல்லம் போன்றவைகள் திறக்க இன்னும் அரசு அனுமதி தரவில்லை” என்று அறிவித்தார்.
2-வது சீஸனுக்காகத் தாவரவியல் பூங்காவில் 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது பூத்துக் குலுங்குகின்றன. சுற்றுலாப் பயணிகள் கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பூங்காவைப் பார்த்து ரசிக்கலாம் என தோட்டக்கலைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முதல் நாளில் 104 பேரும், இரண்டாம் நாளில் 140 பேரும் மட்டுமே இங்கு வந்து சென்றுள்ளனர். இன்று காலை 11 மணி வரை மொத்தமே 6 பேர்தான் வந்துள்ளனர்.
நேற்று ஊட்டியில் கடுமையான மழை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை இவ்வளவு குறைந்திருக்கிறது என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ஆனால், “கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு போன்ற சமதளப் பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்திருப்பதால், மக்களிடம் இயல்பாகவே கரோனா அச்சம் நிலவுகிறது. ஆகவேதான் நாளுக்கு நாள் கூட்டம் குறைகிறது” என்று பூங்கா ஊழியர்கள் சொல்கிறார்கள்.
இதர சுற்றுலா இடங்களிலும்கூட மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. இதுகுறித்து ஊட்டி தாவரவியல் பூங்கா தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியத்திடம் பேசினேன்.
“பூங்காவில் பார்வையாளர்கள் வருவதற்கும் போவதற்கும் தனித்தனி வழியை உருவாக்கியிருக்கிறோம். கைகளில் சானிடைசர் பூசி, காய்ச்சல் சோதனை செய்த பின்னரே பார்வையாளர்களை அனுமதிக்கிறோம். ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் வரை அனுமதிக்கலாம் என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நாளைக்கு 100-150 பேருக்கு மேல் வருதில்லை. கரோனா தொற்று குறைந்தால் கூட்டம் அதிகரிக்கலாம்” என்று தெரிவித்தார்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நிரந்தர, ஒப்பந்தப் பணியாளர்கள் என சுமார் 170 பேர் பணிபுரிகின்றனர். ஆனால், 100 பேருக்கும் குறைவாகவே தற்போது பணிக்கு வருகின்றனர். பணியாளர்கள் வெவ்வேறு கிராமங்களிலிருந்து வருபவர்கள். பேருந்துகள் சரிவர இன்னமும் இயங்கவில்லை. அதனால்தான் அவர்கள் வரவில்லை என்று அலுவலர்கள் காரணம் சொல்கிறார்கள்.
ஊழியர்களிடம் பேசியபோது, ‘‘வேலைக்கு எப்படியாவது வரணும்னுதான் எல்லோரும் நினைக்கிறாங்க. எப்படியும் நடந்தும், ஏதாவது ஒரு வண்டியைப் பிடித்தும் கூட வந்து விடுவார்கள். ஆனால், வெளியே வந்தால் எங்கே கரோனா வந்துடுமோங்கிற பயம் எல்லோருக்கும் இருக்கு. அதுதான் வேலைக்கு வர்றவங்ககூட குறைஞ்சிருக்காங்க” என்றனர்.
ஆனால், வியாபாரிகளின் கருத்தோ வேறு மாதிரி இருக்கிறது. “சுற்றுலா வருபவர்கள் சுதந்திரமாக உலவுவதையே விரும்புவார்கள். சுற்றுலா வரணும்னா அதுக்கும் இ-பாஸ் அவசியம் என்பதுதான் சுற்றுலாப் பயணிகளைப் பயமுறுத்துகிறது. ‘அதை விண்ணப்பித்து வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு போகிற இடமெல்லாம் காட்ட வேண்டும். எதற்கு ரிஸ்க்கு’னுதான் பெரும்பாலும் வெளியூர்வாசிகள் ஊட்டிக்கு வரவே யோசிக்கிறாங்க” என்கிறார்கள் அவர்கள்.