Last Updated : 12 Sep, 2020 04:32 PM

 

Published : 12 Sep 2020 04:32 PM
Last Updated : 12 Sep 2020 04:32 PM

எண்ணெய்க் கிணறு அமைக்க ஓஎன்ஜிசிக்கு 2023 வரை கால நீட்டிப்பு: மத்திய அரசின் முடிவுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இருள்நீக்கி உட்பட 8 இடங்களில் ஓஎன்ஜிசி சார்பில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்க மேலும் கால அவகாசம் வழங்கப்படுவதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில், கிணறு அமைக்க 2023-ம் ஆண்டு வரை கால நீட்டிப்பு வழங்கும் மத்திய அரசின் முடிவைக் கைவிட வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் பெரியகுடி கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கத் தோண்டப்பட்டு, நிறுத்தப்பட்டுள்ள கிணறு அருகே மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது;
"காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு மசோதா என்ற பேரில் விவசாயிகள் கருத்துக் கேட்காமலேயே மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதியின்றி, மாநில அரசுகளின் ஒப்புதலின்றி ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற பேரழிவுத் திட்டங்களை நிறைவேற்ற மாபெரும் சதித்திட்டத்தை அரங்கேற்றி வருகிறது.

கடந்த 2013-ல் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு அமைக்கும்போது கட்டுக்கடங்காத வாயு வெடித்து, குழாயை உடைத்துக் கொண்டு வெளியேறியது. இதனையறிந்த விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டோம். தொடர்ந்து தீயை அணைத்து, கிணறு தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.

பின்னர் இக்கிணற்றை சுற்றி இருள்நீக்கி, விக்கிரபாண்டியம், ஆலாத்தூர், மாவட்டக்குடி, குலமாணிக்கம், பெரியகுருவாடி, பள்ளிவர்த்தி, சேந்தமங்கலம் கிராமங்களில் 8 கிணறுகள் புதிதாக அமைக்க மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. இது குறித்து 2014-ல் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அனுமதி வழங்கக்கூடாது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஓஎன்ஜிசிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டதோடு நிலம் கொடா இயக்கமும் துவங்கப்பட்டது. விவசாயிகள் அனைவரும் ஓஎன்ஜிசிக்கு நிலம் அளிக்க மாட்டோம் என உறுதியேற்றனர். இந்நிலையில் தமிழக அரசு காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்து தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வேளண்மை துறை சார்பில் தனித்தனியே அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால், இதனை முடக்கும் உள்நோக்கத்தோடு மத்திய அரசு மேற்கண்ட 8 கிணறுகளை மீண்டும் தோண்டுவதற்கு 2023 வரை கால நீட்டிப்பு வழங்க ஓஎன்ஜிசியின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திற்குப் பரிந்துரைத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதனை மத்திய அரசு உடனே கைவிட வலியுறுத்துகிறோம். மேலும், தமிழக அரசு இதனைத் தடுத்து நிறுத்த அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்"
இவ்வாறு பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார், கோட்டூர் ஒன்றியத் தலைவர் சேகர், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், மூர்த்தி, சோமசுந்தரம் சேகர், உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x