Last Updated : 12 Sep, 2020 04:11 PM

 

Published : 12 Sep 2020 04:11 PM
Last Updated : 12 Sep 2020 04:11 PM

நீட் தற்கொலைகளுக்குப் பெற்றோர்களும் ஒரு காரணம்: அரசுப்பள்ளி முன்னாள் ஆசிரியை சபரிமாலா பேட்டி

நீட் தேர்வுக்கு எதிராக தன்னுடைய அரசுப் பள்ளி ஆசிரியர் பணியைத் துறந்தவர் சபரிமாலா. அனைவருக்கும் சமமான கல்வி, பெண் விடுதலையை வலியுறுத்தி இயக்கம் நடத்தியவர், சமீபத்தில் அதனைக் கட்சியாக மாற்றியிருக்கிறார். மதுரையில் இன்று நீட் தேர்வுக்குத் தயாரான மாணவி தற்கொலை செய்ததைத் தொடர்ந்து, சபரிமாலா இந்து தமிழ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அனிதாவில் தொடங்கி நீட் விவகாரத்தில் இதுவரை மொத்தம் 16 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இவர்களது மரணங்கள் சொல்லும் செய்தி என்ன?

பிள்ளைகள் நீட் தேர்வுக்குப் பயப்படுகிறார்கள். மருத்துவ சீட்களின் எண்ணிக்கை வெறுமனே ஆயிரமாக இருந்தபோது நடக்காத தற்கொலைகள், 4,500 ஆக உயர்ந்த பிறகு நடப்பதற்குக் காரணம் நீட் தேர்வுதான். அந்தளவிற்கு அந்தத் தேர்வு முறையும், அதுபற்றி வருகிற செய்திகளும் மாணவர்களைப் பயமுறுத்துகின்றன. வெறுமனே மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மட்டும் தற்கொலை செய்யவில்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த கோவை சுபஸ்ரீ போன்றோரும் தற்கொலை செய்திருக்கிறார்கள். இறந்த ஒவ்வொருவரும் தேர்வுக்கெனக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் பயமும், நெருக்கடியும் அவர்களை இந்த முடிவை நோக்கித் தள்ளியிருக்கிறது.

மதுரை மாணவிகூட, ஓராண்டாக கோச்சிங் போயிருக்கிறார். இரவு 1 மணி வரையில் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்தவர், "எல்லாருமே என்கிட்ட ரொம்ப எதிர்பார்க்கறீங்க, ஆனா, எனக்குத்தான் பயமா இருக்கு" என்று கடிதம் எழுதிவைத்துவிட்டுத் தற்கொலை செய்திருக்கிறார். 12-ம் வகுப்பில் 1,176 மதிப்பெண் எடுத்த அனிதாவும் இதே நெருக்கடிக்குத்தான் ஆளானார். நீட் தேர்வை ரத்து செய்யாமல் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வில்லை. ஆனால், இப்போதிருக்கிற அரசு நீட் தேர்வை ரத்து செய்யவே செய்யாது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறபோது, பெற்றோர்கள், ஆசிரியர்களின் பொறுப்பு அதிகமாகிறது. ஆனால், அவர்கள் தங்கள் கடமையைச் செய்யத் தவறியது மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமாகிவிட்டது.

பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களை நிர்பந்தம் செய்கிறார்கள் என்கிறீர்களா?

ஆமாம். பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகளை நிர்பந்தம் செய்கிறார்கள். "டாக்டரானால் நிறைய சம்பாதிக்கலாம்" என்று சொல்லி நிர்பந்திப்பதுகூடக் குறைவுதான். அதுதான் சமூக அந்தஸ்து என்று சொல்கிறார்கள். முன்பெல்லாம் தேர்வில் மோசமாகத் தோல்வியடையும் குழந்தைகள்தான் தற்கொலை செய்வார்கள். இப்போது முதல்தர மதிப்பெண் பெறும் மாணவர்கள்தான் தற்கொலை செய்கிறார்கள். காரணம், சின்ன வயதிலிருந்தே "இதுதான் உன்னுடைய லட்சியம்..." என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறார்கள். பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்கிறார்கள். உறவினர்களும், "நீட் பாஸாகிவிடுவாயா?" என்று கேட்டுக் குடைச்சல் கொடுக்கிறார்கள். ஆசிரியர்களும் சேர்ந்து கொள்கிறார்கள்.

நீட் தேர்வு எழுதும் பிள்ளைகளின் பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?

"நம் ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தமிருக்கிறது. நீயும் விரும்பினாய் என்றுதான் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறோம். அதுமட்டும்தான் வாழ்க்கை என்று நினைத்துவிடாதே. நீ டாக்டர் ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி, எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. என்ன நடந்தாலும் நாங்கள் உன்னோடுதான் இருப்போம்" என்று பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். தப்பான முடிவெடுக்க மாட்டேன் என்று பிள்ளைகளிடம் சத்தியம் கூட வாங்கலாம்.

பத்திரிகையில் குழந்தைகளைப் பற்றிய குற்றச் செய்திகள் வரும்போது, தான் பெற்ற பிள்ளைகளை அழைத்து விழிப்புணர்வு ஊட்டுகிற ஆசிரியர்கள், அதைத் தங்களிடம் படிக்கிற குழந்தைகளிடமும் சொல்ல வேண்டும்.

இறந்த 16 பேரில், பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்களுக்கு மனோதிடம் இல்லையா?

தற்கொலை செய்த 16 பேரில், மாணவன் விக்னேஷ் தவிர மற்ற அனைவருமே பெண்கள். பெண் பிள்ளைகளின் உளவியலைக் கவனித்தீர்கள் என்றால், அவர்கள் ஒன்றை நினைத்தால் அதைச் செய்தே தீர வேண்டும் என்று நினைப்பார்கள். லட்சியத்தைத் தேர்வு செய்வதிலும், அதை அடைவதிலும் பெரும் சிரத்தை எடுத்துக்கொள்வது அவர்களின் வழக்கம். கூடவே, பெற்றோரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும், அவர்கள் நினைப்பதைச் செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் மீது தலைமுறை தலைமுறையாக இந்தச் சமூகம் திணித்திருக்கிறது.

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரையில் அனிதா சென்றதற்கும்கூட அதுதான் காரணம். நம்முடைய பெண் பிள்ளைகளின் உளவியலை வலிமைப்படுத்த வேண்டியதிருக்கிறது. எனவே, 'பெண்மையே பேராற்றல்' என்று பரப்புரை செய்ய வேண்டிய தேவையிருக்கிறது. நானும் அதைச் செய்கிறேன் என்றாலும், இன்னும் பல நூறு மடங்கு அதைத் தீவிரப்படுத்த வேண்டிய தேவையை இந்த மரணங்கள் உணர்த்துகின்றன.

இந்தப் பிரச்சினைக்கு நீங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன?

நீட் தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு. ஆனால், அதை இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் செய்யவே மாட்டார்கள் என்பதை இந்த மூன்று ஆண்டுகளில் தெரிந்துகொண்டேன்.

வருகிற 16-ம் தேதி திருச்செங்கோட்டில் தற்கொலைக்கு எதிராக தூக்குக்கயிறு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறேன். போராட்ட மேடையில் தூக்குக் கயிறுகளைத் தொங்கவிட்டு, ஒரு தற்கொலை உங்கள் குடும்பத்தை எப்படிப் பாதிக்கிறது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறேன்.

"உங்களால் மருத்துவராக முடியாவிட்டால் உயிரை மாய்க்காதீர்கள். வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, உங்கள் தம்பி, தங்கைகளை மருத்துவராக்கப் போராடுங்கள் பாடப்புத்தகத்தோடு அம்பேத்கர், ஜோதிராவ் பூலே போன்றோரின் வாழ்க்கையையும் படியுங்கள். அவர்கள் வாழ்க்கையில் சந்திக்காத துன்பங்களா? அவமானங்களா?" என்று பேசப் போகிறேன்.

திடீரெனக் கட்சி ஆரம்பித்தது ஏன்?

அனிதா மரணத்திற்குப் பிறகு வீட்டிற்கே போகாமல், பள்ளி - கல்லூரி மாணவிகளைச் சந்தித்தேன். தினமும் 4, 5 கூட்டங்கள். நீட் தோல்விக்குத் தற்கொலை தீர்வல்ல. அனிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால், அவளது அறிவுக்கும், சமூக அக்கறைக்கும் கலெக்டராகி 100 மருத்துவமனைகளைக் கட்டியிருக்க முடியும் என்று பேசினேன். இப்படி ஊர் ஊராகத் தனி ஆளாகச் செல்வதைவிட, ஒரு இயக்கமாக, கட்சியாகப் போனால் இன்னும் நிறையப் பேரைச் சந்திக்கலாமே என்கிற ஆசையில்தான், 'பெண் விடுதலை கட்சி' என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறேன். இந்தக் கட்சியில் அனைத்து பொறுப்புகளுக்கும் பெண்கள் மட்டுமே வர முடியும்.

இந்த பொது முடக்க காலத்தில் மட்டும், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக 15 ஆயிரம் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. வீட்டிற்குள்ளேயே பெண்களுக்கு எதிராக இவ்வளவு பிரச்சினைகள். எனவே, நீட் தேர்வு மட்டுமின்றி பெண்களின் பிற பிரச்சினைகளிலும் அக்கறை செலுத்துவேன்.

இவ்வாறு சபரிமாலா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x