

புதுச்சேரி மாநிலத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் தவறு நடக்க வாய்ப்பில்லை என மாநில பாஜக தலைவரும், சட்டப்பேரவை நியமன உறுப்பினருமான வி.சாமிநாதன் கூறியுள்ளார்.
பாஜக சார்பில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (செப். 12) நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் பங்கேற்று வி.சாமிநாதன் பேசுகையில், "புதுச்சேரி மாநிலத்தில் எல்லா கட்சிகளை விடவும் கடந்த ஒரு மாதத்தில் அதிகமான இணைப்பு நடந்துள்ள ஒரே கட்சி பாஜக மட்டுமே. இங்கு மோடி அலை ஏற்பட்டுள்ளது. இந்த முறை தேர்தலில் யார் நின்றாலும் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் மீண்டு வருவது என்பது பிரதமர் மோடி கையில் மட்டுமே உள்ளது.
காங்கிரஸ் இல்லாத புதுச்சேரியை உருவாக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதற்கு பணத்தின் அடிப்படையில் பாஜகவில் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. கட்சியில் தீவிரமாக உழைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு, வெற்றி பெறச் செய்யப்படுவார்கள். அதனால் தீவிரமாக உழைக்க வேண்டும்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி என ஏற்கெனவே புதுச்சேரியில் காங்கிரஸ் சொன்னதை இப்போது பாஜகவினர் திருப்பிச் சொல்ல வேண்டும். புதுச்சேரியில் ஆட்சியில் இல்லாதபோதும் மத்திய பாஜக அரசு இங்கு பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளது. காங்கிரஸ் செயலிழந்துவிட்டது.
புதுச்சேரியில் கல்வி நிலை சீரழிந்துவிட்டது. எல்லா அரசுப் பள்ளிகளையும் மீட்கக் கூடிய நடவடிக்கை பிரதமரால் கண்டிப்பாக முடியும். மாணவர்களின் மன நிலையை நன்கு உணர்ந்துள்ள ஒரே பிரதமர் மோடி மட்டுமே. மத்திய அரசின் திட்டங்களை கட்சியினர் மக்களிடையே வீடு, வீடாக சென்று எடுத்துக் கூற வேண்டும்" என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாஜக சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. பாஜக முன் கூட்டியே தேர்தல் பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகிறது. பல்வேறு கட்சிகளிலிருந்தும் நாள்தோறும் ஏராளமானோர் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர்.
புதுச்சேரியை காங்கிரஸ் இல்லாத மாநிலமாக மாற்றக்கூடிய ஒரு சூழல் உருவாகி வருகிறது. வரும் தேர்தலில் பாஜக மிகப்பெரும் வெற்றி பெறும். புதுச்சேரியில் 2021-ம் ஆண்டு கண்டிப்பாக பாஜக ஆட்சி அமையும். ஊழல் இல்லாத ஒரு அரசு அமையும். அனைத்துத் திட்டங்களும் செயபடுத்தப்படும். கூட்டணியைப் பொறுத்தவரை தேசிய தலைமை முடிவெடுக்கும்.
காரைக்காலில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கடந்த 4 ஆண்டுகளில் எந்தவித வளர்ச்சியும் ஏற்படுத்தப்படவில்லை. மத்திய அரசின் மீனவர்களுக்கான நலத் திட்டங்களை புதுச்சேரி காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை.
பிரதமரின் கிசான் திட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை காரைக்காலில் மட்டும்தான் அதிகமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் நேரடியாக ஆய்வு செய்து 7 ஆயிரம் பேருக்குதான் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இத்திட்டத்தைப் பொறுத்த வரையில் புதுச்சேரியில் தவறு நடக்க வாய்ப்பில்லை. இது ஒரு சிறிய பகுதி, பாஜகவை சேர்ந்த 3 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர், துணைநிலை ஆளுநர் உள்ளார்.
மத்திய அரசு திட்டங்களை இங்கே செயல்படுத்துவது குறித்து கண்காணிக்கப்படுகிறது. நாங்கள் உன்னிப்பாக கவனித்து தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம். அதனால் மத்திய அரசு திட்டங்களில் இங்கு தவறு நடக்க வாய்ப்பில்லை" என்றார்.
மாநில பொதுச் செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், துணைத் தலைவர்கள் எம்.அருள்முருகன், நளினி கணேஷ், மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி உள்ளிட்டோர் உடன் கலந்து கொண்டனர்.