Published : 12 Sep 2020 03:17 PM
Last Updated : 12 Sep 2020 03:17 PM

ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரினங்களை காக்க ரூ.3 கோடியில் செயற்கை பவளப்பாறைகள்

ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரினங்களை காக்க ரூ.3 கோடியில் மீன்வளத்துறை சார்பாக செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்பட உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் 117 வகையான பவளப்பாறைகள் உள்ளன. கடல்பசு, டால்பின், கடல் ஆமைகளும் என 500க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்களும் பவளப்பாறைகளை சார்ந்து வாழ்கின்றன.

மீன்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் விளங்கி வரும் பவளப்பாறைகளை விற்பனைக்காக வெட்டியேடுப்பது, பிளாஸ்டிக் கழிவுகள், தடை வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது போன்ற காரணங்களால் அழியத் துவங்கி உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் 2050ம் ஆண்டுக்குப்பிறகு பவளப்பாறைகள் முற்றிலும் அழிந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் அழிந்து வரும் பவளப்பாறைகளை பாதுகாக்க இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் உள்ள அரியவகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க ரூ.3 கோடியில் தமிழக மீன்வளத்துறை சார்பாக செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்படவுள்ளன

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது,

தமிழக மீன்வளத்துறை சார்பாக மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் , செயற்கை பவளப்பாறைகள் அமைக்க ரூ.3 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக இரண்டு ஆயிரம் செயற்கை பவளப்பாறைகள் தலா ரூ. 15 ஆயிரம் வீதம் ரூ. 3 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு பவளப்பாறையும் 5 அடி நீளமும், 3 அடி அகலமும் உடையதாக இருக்கும். இவை வட்ட மற்றும் முக்கோண வடிவிலும் அமைக்கப்படும். இந்த செயற்கை பவளப்பாறைகள் அனைத்தும் தொண்டி முதல் ராமேசுவரம், தனுஷ்கோடி முதல் வாலிநோக்கம் வரையில் உள்ள கடல் பகுதியில் 10 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்படும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x