Published : 12 Sep 2020 03:15 PM
Last Updated : 12 Sep 2020 03:15 PM

திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் ரூ.89.19 கோடி சொத்துகள் ஃபெமா சட்டத்தின் கீழ் முடக்கம்: அமலாக்கத்துறை அறிவிப்பு

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அவரது குடும்ப உறுப்பினர்கள் வெளிநாட்டில் பங்குகள், முதலீடு போன்றவற்றில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்த அமலாக்கத்துறை வெளிநாட்டில் செய்யப்பட்ட முதலீட்டுக்கு இணையாக உள்ள ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.


சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது. அதன்பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் சிங்கப்பூரை சேர்ந்த சில்வர் பார்க் இண்டர்நேசனல் என்ற நிறுவனத்தில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மகன் சந்தீப் ஆனந்த் ஆகியோர் முதலீடு செய்து இருப்பதாக இருவர் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இதையடுத்து, ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக சிங்கப்பூரில் முதலீடு செய்த வழக்கில் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் முடக்கி உள்ளனர். சிங்கப்பூரில் ரூ.89 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளனர்.

இதற்கு இணையான மதிப்புள்ள சொத்துக்களை இந்தியாவில் முடக்குவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.89 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்கள், வீட்டு மனை, வீடு மற்றும் அவர்களது வங்கி கணக்குகள் இந்த முடக்கத்தில் அடங்கும்.

அமலாக்க இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

“வெளிநாட்டு பரிவர்த்தனை மேலாண்மை சட்டம் 1999 (ஃபெமா) பிரிவு 37 ஏ -ன் கீழ் இந்த பறிமுதல் உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஃபெமாவின் பிரிவு 4 க்கு முரணாக சிங்கப்பூர் சார்ந்த நிறுவனத்தில் சட்டவிரோதமாக ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் வாங்கிய, வைத்திருந்த மற்றும் மாற்றப்பட்ட வெளிநாட்டு பங்குகள் சம்பந்தப்பட்டதாக கருதியவகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஃபெமாவின் பிரிவு 37 ஏ இன் விதிகளின்படி, இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள ஏதேனும் அந்நிய செலாவணி, அந்நிய பாதுகாப்பு அல்லது அசையாச் சொத்துக்கள், ஃபெமாவின் 4 வது பிரிவுக்கு முரணாக வைத்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், அமலாக்க இயக்குநரகம் அதன் மதிப்புக்கு சமமானதைக் கைப்பற்ற அதிகாரம் அளிக்கிறது”.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x