Last Updated : 12 Sep, 2020 12:09 PM

 

Published : 12 Sep 2020 12:09 PM
Last Updated : 12 Sep 2020 12:09 PM

பிரதமர் மோடியின் தோற்றங்களை வரையும் பள்ளி மாணவர்: 70-வது பிறந்த நாளில் காட்சிக்கு வைக்கத் திட்டம்

பிரதமர் மோடியின் படங்களை வரையும். படங்கள்: மு. லெட்சுமி அருண்

திருநெல்வேலி

பிரதமர் மோடியின் 114 வகையான தோற்றங்களை வரைந்து வருகிறார், பாளையங்கோட்டை பள்ளி மாணவர். இப்படங்களை பிரதமரின் 70-வது பிறந்த நாளில் காட்சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளார்.

பாளையங்கோட்டை ஐஐபி லெட்சுமிராமன் மெட்ரிக் பள்ளி 11-ம் வகுப்பு மாணவர் ஜி.மகாராஜன். இவரது தந்தை ஓவிய ஆசிரியர் எம்.கணேசன். இவரது வழிகாட்டுதலால் கடந்த மூன்றரை மாதங்களாக பிரதமர் மோடியின் விதவிதமான படங்களை மகாராஜன் வரைந்து வருகிறார். பாளையங்கோட்டை தெற்கு பஜாரிலுள்ள தனது வீட்டிலும், மகாராஜ நகரிலுள்ள சிவராம் கலைக்கூடத்திலும் மோடியின் உருவங்களை வரைந்து, அவற்றுக்கு வாட்டர் கலர் பூசி வைத்துள்ளார்.

இதுதொடர்பாக மகாராஜன் கூறும்போது, “சிறுவயது முதலே ஓவியங்கள் வரைய தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டேன். கடந்த சில ஆண்டுகளுக்குமுன் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் விதவிதமான ஓவியங்களை வரைந்து எனது தந்தை ஆச்சரியப்படுத்தினார். அதுபோல் பிரதமர் மோடியின் வெவ்வேறு தோற்றங்களை வரைவதற்கு திட்டமிட்டேன். இணையதளத்தில் மோடியின் படங்களை எடுத்து வரைந்து வருகிறேன்.

மாணவர் ஜி. மகாராஜன்

பிரதமர் எந்த பகுதிக்குச் சென்றாலும் அந்தந்த பகுதியின் கலாச்சாரம் பண்பாட்டை வெளிக்காட்டும் வகையில் உடையணிகிறார். இதனால் அவரது விதவிதமான புகைப்படங்கள் ஓவியம் வரைவதற்கு எளிதாக கிடைக்கிறது” என்றார் அவர்.

ஓவிய ஆசிரியர் கணேசன் கூறும்போது, “மொத்தம் 39 அடி நீளம், 17.5 அடி அகலத்தில் HAPPY Birthday MODIJI என்ற வடிவத்தில் 114 ஓவியங்களை வரைந்து, அவற்றை பிரதமரின் 70-வது பிறந்த நாளில் காட்சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x