Last Updated : 12 Sep, 2020 12:01 PM

 

Published : 12 Sep 2020 12:01 PM
Last Updated : 12 Sep 2020 12:01 PM

வாடகை கட்டிடத்தில் செயல்படும் கிராமிய அஞ்சலகங்கள்: அடிப்படை வசதிகளின்றி ஊழியர்கள் அவதி

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் 70 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வரும் அஞ்சல் அலுவலகம்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய அடிப்படை வசதிகளற்ற வாடகை கட்டிடத்தில் கிராமிய அஞ்சல கங்கள் இயங்கி வருவதால், ஊழியர்கள் அவதியுடன் பணியாற்றி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 262 கிராமிய அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கிராமப்புறங்களில் செயல்படும் அஞ்சலகங்களில் 70 சதவீத அஞ்சலகங்கள் வாடகை கட்டிடத்திலும், 30 சதவீத அஞ்சலகங்கள் தொடர்புடைய கிராம தபால் அலுவலர்கள் வீட்டிலும் செயல்பட்டு வருகின்றன. 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் தபால் நிலையங்களுக்கு வாடகையை ஊழியர்களே செலுத்தி வருகின்றனர்.

அஞ்சலகத்துக்கு தனியாக அரசு கட்டிடம் கேட்டு தொடர்ந்து மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக அஞ்சலக ஊழியர்கள் சிலர் கூறும்போது, ``தபால் நிலையங்கள் தற்போது இந்தியன் போஸ்ட் வங்கியாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் வீடுகளை தேடிச் சென்று கடிதம் வழங்கும் பணியுடன், தற்போது பணம் வழங்குதல், காப்பீடு, சேமிப்பு கணக்கு தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

தனியார் கூரியர் நிறுவனங்கள் வந்தாலும், கடைகோடியில் உள்ள மக்களுக்கு கடித போக்குவரத்துக்கு அஞ்சலகங்கள் தான் ஊன்றுகோலாக உள்ளன. அவ்வாறு செயல்படும் கிராமப்புற தபால் நிலையங்களில் போதிய இருக்கைவசதிகள், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. தொடர்புடைய தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது சொந்த பணத்தில் முடிந்த அளவுக்கு அலுவலகத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர்.

இல்லம் தேடி தபால் வங்கி சேவை செய்து வருகிறோம். எங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய நிரந்தர கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x