

சேலத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், நகரின் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி, அதிலிருந்து வெளியேறிய மழை நீர் சிவதாபுரம்- சித்தர்கோயில் சாலையில் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நேற்று முன்தினம் மாலை சுமார் ஒரு மணி நேரம் வரை பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. பழைய பேருந்து நிலையம் அருகே திருவள்ளுவர் சிலை சாலை சந்திப்பில் சாலையில் சுமார் ஒரு அடி உயரத்துக்கு மேலே மழை நீர் ஓடியது.
இதனிடையே, அம்மாப் பேட்டை மிலிட்டரி ரோடு, பொன்னம்மாப்பேட்டை, செவ்வாய்பேட்டை, புதுரோடு உள்பட நகரின் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல தேங்கியது. செவ்வாய்பேட்டை, நாராயண நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
இதனிடையே, சேலம் சிவதாபுரம் அருகே சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியது.
அதில் இருந்து வழிந்தோடிய நீர், வெள்ளமாக வெளியேறி சிவதாபுரம்- சித்தர்கோயில் சாலை நெடுக, சுமார் ஒரு கிமீ., தொலைவு வரை ஓடி, பின்னர் ஓடையில் கலந்தது. ஏரி நீரால் சாலை முழுவதும் மூழ்கிய நிலையில், இரு சக்கர வாகனங்களும், பாதசாரிகளும் சாலையில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், சேலத்தாம்பட்டி ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பு கொண்டது. முழுவதும் நிரம்பியுள்ள இந்த ஏரியில் இருந்து நீர் வழிந்தோடும் நிலையில், அதன் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக, ஏரி நீர் கடந்த ஆண்டும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
தற்போதும் இதே அவலம் நீடிக்கிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.