சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு சென்ற விவகாரம்: உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (செப். 12) வெளியிட்ட செய்தி வெளியீடு:

"கடந்த 19.07.2017 அன்று சட்டப்பேரவையில் குட்கா பாக்கெட்டுகள் மற்றும் புகைப்படங்கள் காட்டப்பட்டது தொடர்பாக உரிமைக்குழு நோட்டீஸ் வழங்கியதை எதிர்த்து திமுக எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த ரிட் மனு மீதான வழக்கில் கடந்த ஆக. 25 அன்று, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற முதல் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து, கடந்த செப். 7 அன்று கூடிய பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக்குழு, ஜூலை 19, 2017 (மூன்றாண்டுகளுக்கு முன்னர்) அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மீண்டும் விவாதித்ததாகக் கூறி தமிழக சட்டப்பேரவைச் செயலாளர், திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, செப். 14 அன்று திமுக எம்எல்ஏக்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புது நோட்டீஸ்களின் நோக்கம் திமுக எம்எல்ஏக்களை நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில் இருந்து தடுப்பதும், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தவறாகக் கையாண்ட விவகாரத்தைச் சட்டப்பேரவையில் எழுப்புவதைத் தவிர்க்கவுமே என்பது தெளிவாகிறது.

எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் இந்தப் புதிய நோட்டீஸ்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் புதிய ரிட் மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in